அமைச்சர் றிசாத் உள்ளிட்டோரின் வீடுகளை சுற்றி வளைக்க இனவாதிகள் திட்டம்; தடுத்து நிறுத்தி தண்டனை வழங்குமாறு ஆசாத் சாலி கோரிக்கை

🕔 September 17, 2017
லங்கை வாழ் முஸ்லிம்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் இந்த நாட்டில் வாழும் சூழல் இல்லாத போது, மியன்மார் அகதிகளை இந்த நாட்டுக்குக் கொண்டு வந்து நாங்கள் குடியேற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக இனவாதிகள் போலியான வதந்திகளைப் பரப்பி தற்போது இருக்கின்ற அற்ப சொற்ப நிம்மதிகளையும் குலைக்கப பார்க்கின்றனர் என்று தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் ஆசாத் சாலி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மரைக்கார், ஆசாத் சாலி மற்றும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஆகியோர் ரோஹிங்ய அகதிகளை இங்கு கொண்டு வந்து குடியேற்ற நடவடிக்கை எடுப்பதாக போலியான செய்திகளைப் பரப்பி வரும் இனவாதக் கூட்டம், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டங்களிலும் எம்மை தூஷித்துள்ளன.

எங்களது வீடுகளை சுற்றிவளைத்து இனவாதிகள் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் கசிந்துள்ளன. இனவாதிகளின் இந்த திட்டம் பாதுகாப்புத் தரப்புக்கும் தெரியவந்துள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் இந்த நாட்டில் மீண்டும் இன மோதலை உருவாக்குவதே இவர்களின் எண்ணமாகும். இந்த தீய சக்திகளை கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம்.

இந்த நாட்டிலே முஸ்லிம்கள் தமது பள்ளிவாசல்களைக் கூட கட்டுவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை மறுப்பு தெரிவித்து வரும் இச்சூழலில், வெளிநாட்டு அகதிகளை இங்கு கொண்டு வந்து நாங்கள் குடியேற்றப் போவதாக இவர்கள் இவ்வாறு போலிக் கதைகளை பரப்பி வருவதன் பின்னனியை அரசாங்கம் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கா விட்டால், இனங்களுக்கிடையே நல்லுறவு சீர்குலைய வழியமைத்ததாகிவிடும்.

கடந்த காலங்களிலும் இனவாதிகள் வில்பத்து பிரதேசத்தில் முஸ்லிம் கொலனியொன்று அமைக்கப்பட்டு வருவதாகவும், வெளிநாட்டு முஸ்லிம்கள் அங்கு குடியமர்த்தப்படுவதாகவும் வீணான அபாண்டங்களை பரப்பியதாகவும் ஆசாத் சாலி தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்