20 தொடர்பான உச்ச நீதிமன்ற பரிந்துரையில் விளக்கமில்லையாம்; அரசாங்க உயர் தலைவர் விசனம்
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றவதாகயின் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ள நிலையில், தனது முடிவுக்கான காரணங்களை நீதிமன்றம் முன்வைக்கவில்லை என்று, அரசாங்கத்தின் உயர் மட்டத்தவர் ஒருவர் விசனம் வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆலோசனைக் கூடத்தின் போதே, அவர் இந்த விசனத்தை வெளியிட்டுள்ளார்.
20ஆவது திருத்தம் தொடர்பிலான உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையானது 16 பக்கங்களில் அமைந்துள்ளது.
20ஆவது திருத்தமானது மக்களின் வாக்குரிமை மற்றும் இறைமை ஆகியவற்றோடு சம்பந்தப்பட்ட அரசியலமைப்பின் மூன்றாவது உறுப்புரிமையினை அப்பட்டமாக மீறுவதாக உச்ச நீதிமன்றம் தனது பரிந்துரையில் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, 20ஆவது திருத்தத்தினை நிறைவேற்றுவதாயின் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்களின் அனுமதியைப் பெறவேண்டுமெனவும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், அரசியலமைப்பின் மூன்றாவது உறுப்புரிமையினை 20ஆவது திருத்தம் எவ்வாறு மீறுகின்றது என்பதை, உச்ச நீதிமன்றம் தனது பரிந்துரையில் விபரிக்கவில்லை என்று, ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மேற்சொன்ன உயர் மட்ட தலைவர் கூறி, தனது விசனத்தையும் தெரிவித்துள்ளார்.