20ஆவது திருத்தம் அவுட்; சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என, உயர் நீதிமன்றம் தீர்ப்பு
– என். வித்தியாதரன் –
அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல்களை நடத்துவதற்கு வழி செய்யும் விதத்தில் அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்டுள்ள 20ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதாயின், நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடனும், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் மக்களின் அனுமதியுடனுமே அதனைத் செய்ய முடியும் என, உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது என நம்பகரமாக அறிய வருகின்றது.
உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சபாநாயகர் கருஜயசூரியவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக, உயர் நீதிமன்ற வட்டாரங்கள் மூலம் அறியவந்தது.
பிரதம நீதியரசர் பிரசாத் டெப், நீதியரசர்கள் அனில் குணவர்த்தன,விஜித் மலலகொட ஆகியோரைக் கொண்ட குழாத்தினரே, இந்த 20ஆவது திருத்தம் தொடர்பான விசாரணைகளை நடத்தி வந்தது.
இந்தத் திருத்தத்துக்கு எதிராக 12 மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அவற்றின்மீதான விசாரணைகள் நேற்று முன்தினம் நிறைவுற்றமையினை அடுத்து, இந்தத் திருத்தம் தொடர்பில் தனது அவதானிப்புகள், பரிந்துரைகள் அடங்கிய தீர்ப்பினை, அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு அமைய, ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் நேற்றைய தினம் அனுப்பி வைத்தது என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
இந்தத் தீர்ப்பின் உள்ளடக்கத்கத்தினை ஜனாதிபதி பரிசீலித்தாரா? அரசாங்கத்தின் அடுத்த நடவடிக்கை என்ன? தீர்ப்பின் விபரம் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் ஏனைய தரப்பினருக்குத் தெரிய வந்துள்ளதா என்பதை அறிய முடியவில்லை.
பெரும்பாலும் தீர்ப்பின் விபரத்தை ஜனாதிபதி தரப்பு, பிரதமருக்கும் அரசாங்கத்தின் ஏனைய உயர் மட்டத்தவர்களுக்கும் இன்று தெரியப்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியலமைப்புத் திருத்தம் எதுவாயினும் அதுகுறித்து உயர் நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்பதுடன், அரசியலமைப்பின் விசேடமான – பிரத்தியேகமான – அடிப்படை சரத்துக்களை மீறும் அம்சங்கள் அத்தகைய திருத்தத்தில் உள்ளது என, உயர் நீதிமன்றம் கருதும் பட்சத்தில், அத்தகைய திருத்தங்கள் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடனும் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் மக்களின் அனுமதியுடனுமே நிறைவேற்றப்பட முடியும் என, உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்யலாம் என்பது தெரிந்த விடயமாகும்.