வடக்கு – கிழக்கு இணைப்புக்குப் பகரமாகவே, த.தே.கூட்டமைப்பு 20ஐ ஆதரித்துள்ளது: தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா

🕔 September 13, 2017

– மப்றூக் –

ரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை அமுல் படுத்துவதன் மூலம்  வடக்கு கிழக்கு மாகாண தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு துரோகமிழைக்கப்படவுள்ளது. மேலும், கிழக்கு மகாண மக்களுக்குத் தெரியாமல் வடக்கோடு கிழக்கை இணைப்பதற்கான ஒரு தந்திரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தந்திரத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்தினும், மு.கா.தலைவர் ரஊப் ஹக்கீமும் இணைந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நடத்தி வருகின்றனர் என்று, தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு தேசிய காங்கிரசின் எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில், இன்று புதன்கிழமை அக்கரைப்பற்றிலுள்ள கிழக்கு வாசல் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.

தேசிய காங்கிரசின் கொள்கை பரப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் மற்றும் அந்தக் கட்சியின் இளைஞர் அமைப்பாளர் சம்பத் ஆகியோரும், இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.

முன்னாள் அமைச்சர் அதாஉல்லா, அங்கு தொடர்ந்து பேசுகையில்;

“20ஆவது திருத்தத்தின் மூலம் கிழக்கின் ஆட்சியினை நீடித்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கவுள்ளனர். ஏற்கனவே, வடக்குடன் கிழக்கினை இணைக்க வேண்டும் என்று, வட மாகாணத்தில் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், கிழக்கு மாகாணத்திலும் தமிழ் தேசியக் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து, வடக்கு – கிழக்கை இணைக்கும் தீர்மானத்தை மேற்கொள்வதற்காகத்தான் 20ஆவது திருத்தம் கொண்டுவரப்படுகிறது.

20ஆவது சட்டமூலத்தை திருத்தங்களுடன் ஆதரிப்போம் என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியதாக நேற்றைய தமிழ் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. அதற்காக மூன்று நிபந்தனைகளை அவர் முன்வைத்திருக்கின்றார். அந்த நிபந்தனைகளில் ஒன்று – புதிய அரசியலமைப்பில் இலங்கையின் ஆட்சி முறைமையை சமஷ்டி ஆட்சி என திருத்துதல், மற்றைய நிபந்தனை வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைத்தலாகும். இதுபோன்று இனங்கள் தொடர்பாக புதிய அரசியலமைப்பில் மாற்றமொன்றை செய்ய வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

ஆக, வடக்கு – கிழக்கு இணைப்புக்காகவும், சமஷ்டி ஆட்சி முறைமையைக் கொண்டு வருவதற்காவுமே, 20ஆவது திருத்தத்தை அவர்கள் ஆதரித்துள்ளனர்.

எனவே, தற்போதைய நிலைமையில் இந்த நாட்டிலும் குறிப்பாக கிழக்கிலும் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகங்கள், என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். கட்சி வேறுபாடுகளையெல்லாம் மறந்து நாட்டிலுள்ள அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள் மற்றும் சமூக அக்கறையாளர்கள் அனைவரும் இணைந்து, வடக்கு – கிழக்கு இணைப்புக்கான இந்த முஸ்தீபினை தடுப்பதற்குத் தயாராகுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.

தேர்தலை ஒத்தி வைக்க வேண்டுமானால், தேர்தல் சட்டங்களில் மாற்றங்களை கொண்டுவர முடியும். அதை விடுத்து, 20ஆவது திருத்தத்தைக் கொண்டு வருதல் முறையல்ல.

எனவே, ஜனாதிபதியவர்கள் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்குமாறு, தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி உத்தரவு வழங்கக் கூடாது என கோரிக்கை விடுக்கின்றேன். மட்டுமன்றி, மஹிந்த ராஜபக்ஷ சார்பான நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்கள் என, அனைத்துத் தரப்பினரிடமும், 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கிழக்கு மாகாண சபையிலுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை, கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்தித்துப் பேசியதாகவும், அவர்களுக்குப் பணம் கொடுத்து, அவர்களின் கடன்களைக் கூட அடைத்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே, பணத்துக்கும் பதவிகளுக்கும் விலை போகக் கூடிய த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்களும், மு.காங்கிரஸ் உறுப்பினர்களும் கிழக்கு மாகாண சபையில் இருக்கத்தக்கதாக, இந்த மாகாண சபையின் ஆட்சியை நீடிப்பது, கிழக்கு  மாகாண மக்களின் ஆணைக்கு முரணானது என்பதை இந்த நாட்டிலுள்ள நீதித்துறையினர் உள்ளிட்ட அனைவரும் உணர வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்