20ஆவது திருத்தத்தில் சிக்கல் இருக்கிறது; ஹக்கீம் கூறிய கருத்தால், அமைச்சரவையில் வாக்குவாதம்

🕔 September 13, 2017

மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், நேற்று செவ்வாய்கிழமை அமைச்சரவையில் 20ஆவது திருத்தம் தொடர்பில் பேசிய போது, அங்கிருந்த ஏனைய அமைச்சர்களுடன் முரண்படும் நிலைமை ஏற்பட்டதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர், அது தொடர்பில் தனக்குள்ள சந்தேகத்தை தெளிவுபடுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டதாகவும் அந்த ஊடகத்தின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அமைச்சரவையில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

20ஆவது திருத்தம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரசுக்கும், அமைச்சர் என்கிற வகையில் தனக்கும் பல்வேறு கேள்விகள் உள்ளன என்று, ஹக்கீம் அங்கு கூறியதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவது, தேசிய தேவையாகும் என்று, அங்கிருந்த அமைச்சர்கள் ஹக்கீமிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதன் பின்னர் திருத்தங்கள் ஏதாவது செய்ய வேண்டுமென நீங்கள் விரும்பினால் அதனைத் தெரியப்படுத்தலாம் எனவும் ஹக்கீமிடம் அமைச்சர்கள் கூறினர்.

இதன்போது, மு.கா. தலைவர் ஹக்கீமுக்கும் ஏனைய அமைச்சர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்