மியன்மார் விடயத்தில் மலேசியா தலையிட வேண்டும்: பேரக் மன்னரிடம் அமைச்சர் ஹிஸ்புல்லா கோரிக்கை

🕔 September 12, 2017
– ஆர். ஹஸன் –

மியன்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல் சம்பவங்களை கண்டித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க பிராந்தியத்தின் வளர்ச்சியடைந்த முஸ்லிம் நாடு என்றடிப்படையில் மலேசியா தலையீடு செய்ய வேண்டும் என, மலேசியாவின் பேராக் மன்னர் சுல்தான் நஸ்ரின் மியூசுதீன் சாஹ்விடம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்தார்.

மலேசியாவில் இடம்பெற்று வருகின்ற Pangkor Dialogue மாநாட்டில் பங்கேற்பதற்காக நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மலேசியா சென்றுள்ள ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், திங்கட்கிழமை அங்கு விசேட உரையொன்றையும் நிகழ்த்தியிருந்தார். பின்னர், குறித்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள உலகநாட்டுத் தலைவர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

இதன்போது, மலேசியாவின் பேராக் மன்னர் சுல்தான் நஸ்ரின் மியூசுதீன் சாஹ்வை நேற்று திங்கட்கிழமை மாலை ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சந்தித்து கலந்துரையாடினார்.

உள்நாட்டு முதலீடுகள், மியன்மார் விவகாரம் என பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டன.

“விசேடமாக, மியன்மார் விடயத்தில் மலேசியா பொறுமையாக இருக்காமல் உடனடியாக தலையிட வேண்டும்.  இந்த விடயத்தில் மலேசியாவின் தலையீடு மிக முக்கியமானது. இந்த பிராந்தியத்தின் வளர்ச்சியடைந்த முஸ்லிம் நாடு என்ற அடிப்படையில் மியன்மார்  ராணுவத்தின் செயற்பாடுகளை கண்டித்து, பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க மலேசியா முன்வர வேண்டும் என்பதை உலக முஸ்லிம்கள் எதிர்பார்க்கின்றார்கள். குறிப்பாக இலங்கை முஸ்லிம்கள் அதிக ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறார்கள்” என இதன்போது ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இலங்கை முஸ்லிம்கள் சார்பில் வேண்டுகோள் விடுத்தார்.

இது தொடர்பில் மலேசியா அரசாங்கம் ஆலோசனை செய்து கொண்டிருக்கின்ற வேளையில், அந்நாட்டு பிரதமரோடு கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாக ராஜாங்க அமைச்சரிடம் பேராக் சுல்தான் உறுதியளித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்