இரண்டாவது துரோகம்; அதாஉல்லாவின் முதுகில், குத்தினார் அமீர்

🕔 September 11, 2017

– மப்றூக் –

கிழக்கு மாகாணசபையின் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர், 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்ந்து கொண்டதன் மூலமாக, அதற்கு ஆதரவளித்துள்ளார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தினை, கிழக்கு மாகாண சபையில் தோற்கடிக்குமாறு முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அறைகூவல் விடுத்து வந்த நிலையிலே,  அவரின் கட்சியைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர் அமீர், இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்.

20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்குமாறு கோரி, கிழக்கு மாகாண எதிர்க்கட்சினரிடம் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் தரப்பில் பேரம் பேசுதல்கள் இடம்பெற்றதாக எதிரணி உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாதொரு நிலையில், ஆதரவாக வாக்களிக்காமல் விட்டாலும் பரவாயில்லை, வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்ந்து கொண்டால், அதுவே போதுமானதாகும் என்று, எதிரணியிடம் பேரம் பேசும்போது கேட்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது.

இதற்கு அமையவே, மாகாணசபை உறுப்பினர் அமீர், வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்ந்திருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்கள் எதிரணியில் அமர்வதெனத் தீர்மானித்த நிலையில், மாகாண சபை உறுப்பினர் அமீர், ஆளுந்தரப்பில் அமர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் போவதாக, தேசிய காங்கிரஸ் அறிவித்ததையடுத்து, எதிர்க்கட்சியினர் பக்கமாக அமீர் அமர்ந்தார்.

இந்த நிலையிலேயே, முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவுக்கு, அவரின் கட்சியைச் சேர்ந்த அமீர், மீண்டுமொரு முறை, முதுகில் குத்தியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்