கிழக்கு மாகாண சபையில் 20வது வென்றது; த.தே.கூட்டமைப்பும் சட்டமூலத்துக்கு ஆதரவு

🕔 September 11, 2017

– மப்றூக் –

கிழக்கு மாகாண சபையில் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் இன்று திங்கட்கிழமை வாக்களிப்பில் வெற்றி பெற்றுள்ளது.

குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 25 வாக்குகளும், எதிராக 08 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும், ஐ.ம.சு.கூட்டமைப்பைச் சேர்ந்த சில உறுப்பினர்களும் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

எதிரணியைச் சேர்ந்த 10 உறுப்பினர்களில் 08 பேர் எதிராக வாக்களித்தனர். மற்றைய இருவரில் ஒருவர் ஆதரவாக வாக்களித்தார். மற்றொருவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

கிழக்கு மாகாண சபையில் இன்று திங்கட்கிழமை அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், சபை ஆரம்பமான போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சமூகமளித்திருந்த போதும் , ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் எவரும்  சமூகமளிக்காமையினால்,  11.00 மணி வரை சபை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் 11.00 மணிக்கு சபை கூடிய போது, எதிரணி உறுப்பினர்கள் வருகை தந்திருந்தனர். ஆனாலும் ஆளுந்தரப்பைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் மட்டுமே சமூகமளித்திருந்தார்.

இதனால், கோரம் போதாமை காரணமாக சபை 1.00 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இதன் பின்னர், 1.00 மணிக்குப் பின்னர் சபை கூடிய போதே, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்