ஹசனலியும் தாஹிரும் தேர்தலில் போட்டியிட்டால், நிந்தவூரில் நான் களமிறங்க வேண்டி வரும்: மு.கா. தலைவர் ஹக்கீம்
– அஹமட் –
“ஹசனலியும், தாஹிரும் தேர்தலொன்றின்போது நிந்தவூரில் போட்டியிடுவார்கள் எனக் கூறப்படுகிறது. அவ்வாறு நடந்தால், நிந்தவூரில் நான் களமிறங்க வேண்டி வரும்” என்று மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.
மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் நேற்று முன்தினம் சனிக்கிழமை கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பேசும் போதே, மு.கா. தலைவர் இவ்வாறு கூறினார்.
மு.காங்கிரசின் செயலாளர் நாயகமாகப் பதவி வகித்த எம்.ரி. ஹசனலியும், அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினராக இருந்த நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிரும் நிந்தவூரைச் சேர்ந்தவர்களாவர்.
மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் கட்சிக்குள் மேற்கொண்ட சர்வதிகார செயற்பாடுகள் தொடர்பில் முரண்பாடு கொண்ட ஹசனலி மற்றும் தாஹிர் உள்ளிட்ளோர், தூய முஸ்லிம் காங்கிரஸ் அணியாக பிரிந்து செயற்பட்டு வருகின்றனர்.
மேற்படி இருவரும் எதிர்வரும் தேர்தலொன்றில் நிந்தவூரிலிருந்து போட்டியிடலாம் என்கிற எதிர்பார்ப்பொன்று உள்ளது.
இது குறித்தே, மு.கா. தலைவர் – மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
“ஒவ்வொரு வட்டாரத்திலும் முஸ்லிம் காங்கிரசின் கிளைக் குழுக்களை அமைக்க வேண்டும். எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வேட்பாளராகக் களமிறக்கக் கூடிய நபர்களை இப்போதே இனங்காண வேண்டும். பிரபல்யமானவர்களையே வேட்பாளர்களாகத் தெரிவு செய்ய வேண்டும்.
நிந்தவூரில் ஹசனலியும், தாஹிரும் தேர்தலில் போட்டியிடவுள்ளனர் என கூறப்படுகிறது. அப்படி நடந்தால் நான் அங்கு களமிறங்குவேன்” என்றார்.
மு.கா. தலைவர் ஹக்கீம் ‘களமிறங்குவேன்’ என்று கூறியதன் அர்த்தம் என்ன என்று, உயர்பீடக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிலரிடம் கேட்டோம். ஹசனலியையும், தாஹிரையும் தோற்கடிப்பதற்காக, தலைவர் – நிந்தவூர் இறங்கி தேர்தல் வேலைகளைச் செய்யவுள்ளார் என்பதையே அப்படிக் கூறினார் என்று, நாம் பேசிய உயர்பீட உறுப்பினர்கள் விளக்கம் தந்தனர்.