நான் ஏன் கையெடுத்துக் கும்பிடுகிறேன்; தனது செயலுக்கு, மு.கா. தலைவர் ஹக்கீம் சொல்லும் விளக்கம்

🕔 September 10, 2017

– முன்ஸிப் அஹமட் –

பெரும்பான்மையினராக பௌத்தர்கள் வாழும் நாட்டில், சிறுபான்மையினராக வாழ்கின்ற நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்கிற முறையிருக்கிறது. பௌத்த ஆட்சியாளர்கள் – அவர்களின் முறைப்படி கும்பிட்டு வணக்கம் தெரிவிக்கும் போது, அதனை மரியாதைப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. அதனால்தான், பதிலுக்கு நானும் கைகூப்பி கும்பிடுகிறேன் என்று, முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

மு.காங்கிரஸ்  இளைஞர் பேரவையினை உருவாக்கும் பொருட்டு, கட்சித் தலைமையகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;

நான் கையெடுத்துக் கும்பிடுவதை மையப்படுத்தி பேஸ்புக்கிலும், இணையத்தளங்களிலும் விமர்சித்து எழுதுகின்றார்கள். பெரும்பான்மையினராக பௌத்தர்கள் வாழும் நாட்டில் சிறுபான்மையினராக வாழ்கின்ற நாம், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை யோசித்துத்தான் நான் அப்படிச் செய்தேன். மாறாக ஈமானை இழந்து விட்டு அப்படி நான் செய்யவில்லை” என்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு அண்மையில் நடைபெற்ற போது, மாநாட்டு மேடையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் – கும்பிட்டு வணக்கம் தெரிவித்திருந்தார்.

மு.கா. தலைவர் இவ்வாறு கும்பிட்டமையானது, ஊடகங்களில் படங்களாக வெளி வந்தமையினை அடுத்து, அவர் மீது முஸ்லிம்கள் தரப்பிலிருந்து பாரிய விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

பௌத்த மதத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்களை சந்திக்கும் வேளைகளில், அநேகமாக கையெடுத்துக் கும்பிடுவதை மு.கா. தலைவர் ஹக்கீம்  வழமையாகக் கொண்டவராவார்.

தொடர்பான செய்தி: மு.கா. தலைவரின் இஸ்லாமிய விரோத செயற்பாடுகள் தொடர்பில் கண்டனம்; உலமாக்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டுமெனவும் கோரிக்கை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்