அரசியல் எனக்கு முழு நேரத் தொழில்; வேறு எவருடனும் போய், விடுதிகளில் நான் தங்குவதில்லை: ஹிஸ்புல்லாஹ்

🕔 September 8, 2017

“கிழக்கு மாகாண முதலமைச்சர் அரசியலை பகுதிநேர தொழிலாக செய்வதாக கூறியிருந்தார். ஆனால் அரசியலை முழு நேர தொழிலாக நான் செய்து வருகின்றேன். வேறு எவருடனும் போய் விடுதிகளில் நான் தங்குவதில்லை. எனது முழு வாழ்க்கையும் அரசியலாகவே உள்ளது. இரவு பகலாக மாதமொன்றுக்கு பத்தாயிரம் கிலோ மீற்றர் நான் வாகனம் ஓடுவதில்லை. ஆட்கள் தேடி விடுதிகளில் தங்குவதும் கிடையாது” என்று,  புனர்வாழ்வு மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புணனை மேற்கு கிடச்சிமடு விசரோடை பாலத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பாலத்துக்கான அடிக்கல்லினை நட்ட அமைச்சர், அங்கு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

கிழக்கு முதலமைச்சர் அரசியல் பணியை பகுதிநேர தொழிலாக செய்வதாக தெரிவித்தாலும், நான் இதனை மக்களுக்கு சேவை செய்யும் முழு நேர தொழிலாகவே கருதுகின்றேன்.

கிழக்கு முதலமைச்சரின் அதிகாரங்கள் இன்னும் சில காலங்களில் போய் விடும். பிறகு அவர் வெறும் மனிதராகத்தான் இருப்பார். மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என்கிற அடிப்படையில் அவர் செயற்படவில்லை.

நாங்கள் தோல்வியடைந்தாலும் அமைச்சருக்கு கொடுக்கின்ற அதே அந்தஸ்தைத்தான் எங்களுக்கு மக்கள் வழங்குவார்கள். நான் மூன்று தடவை தோற்றுள்ளேன், மூன்று தடவை வெற்றி பெற்றுள்ளேன். வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும், அன்பாகத்தான் இருப்பார்கள். அதிகாரம் இருக்கின்றது என்பதற்காக நான்தான் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று செயற்படுவது அரசியலுக்கு கூடாது.

மட்டக்களப்பு பல்கலைக் கழகத்தினை ஒன்றரை வருடமாக நிர்மாணித்து வருகின்றேன். அங்குள்ள கொள்கலனில்தான் எனது வாழ்க்கையை ஒன்றரை வருடமாக நடத்தி வருகின்றேன். நான் நினைத்தால் பாசிக்குடா உல்லாச விடுதியில் தங்க முடியும். சமூகத்திற்கு எதையாவது செய்ய வேண்டும் என்துதான் எங்களுடைய தொழில் . இரவு பகலாக சென்று சமூகத்திற்கு என்ன பிரச்சனைகள் காணப்படுகின்றது, என்ன தேவை, என்ன செய்ய வேண்டும் என்று தேடிப் பார்த்து செய்வதுதான் எங்களுடைய தொழிலாகும்.

கிழக்கு முதலமைச்சர் இரண்டு வருடம் வந்து போவார். அவருக்கு இது பகுதி நேர தொழிலாகும். அது பிரச்சனையில்லை. ஆனால் மக்களுக்கு சேவை செய்வதுதான் எங்களுடைய முழு நேர தொழிலாகவும்  தலையாய கடமையாகவும் உள்ளது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்