மியன்மார் இன அழிப்பைக் கண்டிக்காமல், நல்லாட்சி காத்து வரும் கள்ள மௌனம்
– அ. அஹமட் –
ஓர் அரசாங்கமானது இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் செயற்பட வேண்டும். பல விடயங்களில் விழுந்தடித்துக்கொண்டு அறிக்கைகள்,கண்டனங்களை தெரிவிக்கும் இலங்கை அரசாங்கமானது முஸ்லிம்கள் பாதிக்கப்படும் விடயமேதும் நடைபெற்றால் தூர நின்று வேடிக்கை பார்ப்பது வாடிக்கையாகி விட்டது.
பிரான்ஸில், ரஷ்யாவில், மென்ஷெஸ்டரில், ஏன் பிரஸசல்சில் நடந்த தாக்குதல்களுக்கும், இந்தியா யாத்திரிகர்கள் கொல்லப்பட்டமைக்கும் என, ஜனாதிபதியும் பிரதமரும் மாறி மாறி கண்டன அறிக்கைகளை பதிவாக்கி இருந்தனர்.
மியன்மாரில் அந்த நாட்டு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள கொடூர இனவாத செயலால் பல லட்சக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பல்லாயிரக்கணக்கானோரை மியன்மார் ராணுவம் ஈவிவிரக்கமின்றி காட்டுமிராண்டித் தனமாக கொன்று குவித்தும் வருகிறது. இதற்கு பலரும் கண்டம் தெரிவித்துள்ள நிலையிலும் இலங்கை அரசாங்கம் மௌனம் காத்தே வருகிறது.
அங்கு பௌத்த மதத்தின் பெயரில் இப் பயங்கரவாதம் அரங்கேறிக்கொண்டிருப்பதால் பௌத்த மக்களை பெரும்பான்மையாக கொண்டுள்ள இலங்கையின் கண்டனம் கனதியான பெறுமானமுடையதாக இருக்கும். இவ்வாறான விடயங்களை கருத்தில் கொண்டே கிழக்கு மாகாண சபையில் மியன்மார் அரசாங்கத்தின் இனவாதத்தை கண்டித்து பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
மியன்மார் விவகாரம் தொடர்பில் பேசுமாறு மு.காவின் நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் , மேல் மாகாண சபை உறுப்பினர் இப்திகார் ஜமீல் உள்ளிட்ட பலர் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். மேலும் பலரரும் பேசுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுமுள்ளனர். இது தொடர்பில் தமிழ் தரப்பு கூட மியன்மார் மக்களுக்கு ஆதரவளித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இருந்த போதிலும் இவ் விடயத்தை அரசாங்கம் கண்டுகொள்வதாக இல்லை.
முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்தும் முஸ்லிம்களின் விடயத்தை இவ் அரசாங்கம் கண்டுகொள்வதாக இல்லை. கோரிக்கைகள் ஏதுமின்றியே ஓடிச் சென்று ஏனையோர் விடயத்தில் தலைபோடுகிறது. இதுவே இவ்வரசின் உண்மையான முகமாகும். மியன்மார் அரசாங்கத்தின் செயல்களோடு ஒத்துப் போகும்படியான நிகழ்ச்சி நிரல்களுடன் இயங்கும் இவ் அரசாங்கத்திடமிருந்து இதற்கு கண்டனங்களை எதிர்பார்ப்பது அர்த்தமற்றதுமாகும்.
(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)