மதுக் கடை மேல் பகுதியில் பாடசாலை; அதிர்ச்சித் தகவலை போட்டுடைத்தார் முஜிபுர் ரஹ்மான்

🕔 July 28, 2015

Mujibur rahman - 01
– அஸ்ரப் ஏ. சமத் –

துக் கடை இயங்குகின்ற கட்டிடம் ஒன்றின் மேல் பகுதியில், முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்கும் சர்வதேச பாடசாலையொன்று நடத்தப்பட்டு வரும் அதிர்ச்சிகரமான தகவலொன்றினை, மேல் மாகாணசபை உறுப்பினரும், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐ.தே.கட்சியில் போட்டியிடுகின்றவருமான முஜிபுர் ரஹ்மான் வெளிப்படுத்தினார்.

முஜிபுர் ரஹ்மானை ஆதரித்து, நேற்று திங்கட்கிழமையிரவு  வெள்ளவத்தை மெரைன் ரைவ் ஹோட்டலில், கூட்டமொன்று இடம்பெற்றது. இதில், கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மேற்படி தகவலினை முஜிபுர் ரஹ்மான் கூறினார்.

கொழும்பு இளைஞா் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில், கொழும்பு வாழ் முஸ்லிம்களின் கல்வி, வீடமைப்பு, தொழில் மற்றும் வாழ்வாதாரம் பற்றிய கலந்துரையாடலும் இடம்பெற்றது.  சட்டத்தரனி யு.எம். மா்சூக்  தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், கொழும்பிலுள்ள புத்திஜீவிகள், வர்த்தகர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவிக்கையில்;

கொழும்பில் 05 வீதமான மாணவர்களே, இம்முறை க.பொ. த. சாதாரண தரத்தில் சித்தியடைந்துள்ளனர். மேல் மாகாணத்திலுள்ள 39 கல்வி வலயங்களுள், கொழும்பு மத்திய கல்வி வலயம் 36 ஆவது இடத்தில் – மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.

கொழும்பிலுள்ள 1000 க்கு மேற்பட்ட மாணவா்களுக்கு, ஒவ்வொரு வருடமும் பாடசாலை முதலாம் தர அனுமதி கிடைப்பதில்லை. இதனால்,  இவர்கள் சர்வதேச பாடசாலை நோக்கிச் செல்கின்றனா். தெமட்டக்கொட வீதி பகுதியில் மட்டும்,  20 சர்வதேச பாடசாலைகள் உள்ளன. சர்வதேச பாடசாலை என்பதை இப்போது வியாபாரமாகக் கொண்டு நடத்துகின்றனா்.

கொலனாவயில் மாத்திரம் 15 சர்வதேச பாடசாலைகள் இருக்கின்றன. இப்பாடசாலைகள், ஒரு பிள்ளைக்கு மாதாந்தம் 15 ஆயிரம் ரூபாவினை அறவிடுகின்றன. நாளடைவில், பணம் செலுத்த முடியாமல் பெற்றோர்கள் திண்டாடுகின்றனர். இதனையடுத்து, அரச பாடசாலைகளில் தமது பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு அனுமதி கேட்டு, அரசியல்வாதிகளிடம் செல்கின்றனா்.

பெற்றோா்கள் தமிழ்மொழி பேசுகின்றனர். ஆனால், சிங்கள  மொழி பாடசாலைகளில் தமது பிள்ளைகளைச் சேர்க்கின்றனா். இதனால், பிள்ளைக்கு எந்த  மொழியும் சரியாகத் தெரிவதில்லை. இதனால், பாடசாலைக் கல்வியை, இடைநடுவில் நிறுத்தி விடுகின்றனா்.

மருதானைக்கு சென்று பார்த்தால், அங்கு மதுக்கடை இயங்கிவரும் கட்டிடத்துக்கு மேல் பகுதியில், முஸ்லிம் பிள்ளைகள் கல்வி கற்கும் சர்வதேச பாடசாலையொன்று நடத்தப்படுகின்றது. இதுதான் கொழும்பு வாழ் மக்களின் நிலையாகும். மறைந்த ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் யுகத்திற்குப் பிறகு, கடந்த ஜனாதிபதிகள் சந்திரிக்கா தொட்டு மஹிந்த வரை, இந்த மக்களுக்கு எவ்வித அபிவிருத்தியையும் செய்யவில்லை. கொழும்பை அழகுபடுத்தல் என்ற பெயரில்,  இந்த மக்களின் வீடுகளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ அப்புறப்படுத்தினாா் என்றார்.

கருணாசேன கொடித்துவக்கு

முன்னாள் கல்வியமைச்சரும், சீன நாட்டுக்கு புதிய துாதுவருமாக நியமிக்கப் பட்டுள்ளவருமான கலாநிதி கருணாசேன கொடித்துவக்கு, இங்கு பேசுகையில்;

“முஜிபுர் ரஹ்மான் துடிப்பான ஒருவர். எந்தப் பகுதியில், என்ன தீங்குகள், அநீதிகள் நடைபெற்றாலும், கொழும்பு மத்தியிலுள்ள ஆதரவாளா்களைக் கொண்டு, ஆர்ப்பாட்டம் நடத்தி, அவ் விடயத்தினை உலகுக்குச் சொல்லி விடுவார்.

கடந்த  06 வருடங்களாக, கொழும்பு மத்திய தொகுதிக்கான  ஒரு முஸ்லீம் நாடாளுமன்ற உறு்பிபனரை நாம் இழந்து வந்துள்ளோம். இங்கிருந்து கலீல், ஹலீம் இசாக்,  ஜாபீர் ஏ. காதா், ஆர். பிரேமதாச போன்றவர்கள் நாடாளுமன்றம் சென்றனர்.

நீங்கள் இழந்த அந்தப் பிரதிநிதித்துவத்தினை, முஜீபுர் ரஹ்மானைக் கொண்டு நீங்கள் நிறைவு செய்ய வேண்டும். முஸ்லிம்களின் கல்வி நிலைமை, மிகவும் பின்தங்கிய மாவட்டமாக, கொழும்பு உள்ளது.  நான்  கல்வியமைச்சராக இருக்கும்போது,  கொலனாவையில் முஸ்லிம்களுக்கென பாடசாலையொன்றினை நிறுவ முற்பட்டபோது,  அப்போதைய ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல்மாகண  முதலமைச்சா் ரெஜிநோல் குரே அதனைத் தடுத்து நிறுத்தினாா்.

அவரின் அனுமதி இல்லாமல், நான் எந்த  மாகண பாடசாலைக்கும்  போகமுடியாது, கல்வியதிகாரிகளுக்கு சுற்றறிக்கையினை அனுப்பியிருந்தாா்” என்றார்.

இம்தியாஸ் உரை

இந் நிகழ்வில் கலந்து கொண்ட  முன்னாள் அமைச்சரும், ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியலில் இம்முறை இடம்பெற்றுள்ளவருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் உரையாற்றுகையில்,

கொழும்பு மத்தியதொகுதியில் ரணில் விக்கிரமசிங்க உருவாக்கிய ‘புஞ்சி பிரேமதாச’ போன்று முஜிபுர் ரஹ்மானை, முஸ்லிம்களின் பிரநிதியாக நாம் தோ்ந்தொடுத்து, அவரை இம்முறை நாடாளுமன்ற உறுப்பினராக அனுப்ப வேண்டும் என்றார்.

Mujibur rahman - 03Mujibur rahman - 04Mujibur rahman - 02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்