முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறை

🕔 September 7, 2017

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு, மூன்று ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ சார்பாக, பௌத்த சமய நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆடைகளுக்கான ‘சில்’ துணிகளை மக்களுக்கு வழங்குவதற்காக, தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் 600 மில்லியன் ரூபாய் நிதியினை மோசடியாகப் பயன்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டில், மேற்படி இருவருக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேற்படி காலப்பகுதியில், தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவராகவும் லலித் வீரதுங்க பதவி வகித்திருந்தார்.

இந்த வழக்கில் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோரை குற்றவாளிகளாகக் கண்ட நீதிமன்றம், அவர்கள் இருவருக்கும் மூன்று ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மேலும், குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட மேற்படி இருவரும் தலா 02 மில்லியன் ரூபாவினை தண்டப்பணமாக செலுத்த வேண்டுமெனவும் இதன்போது நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதேவேளை, தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு நஷ்டஈடாக, குறித்த இருவரும் தலா 50 மில்லியன் ரூபாவினை வழங்க வேண்டும் எனவும், குறித்த தொகையை இம்மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டுமெனவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளராகவும் அனுஷ பல்பிட்ட பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்