‘மரம்’ தாவும் எண்ணத்தில் சிராஸ் மீராசாஹிப்; ஜெமீல் மீது கொண்ட கடுப்பின் விளைவு

🕔 September 6, 2017

– அஹமட் –

கில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவரும், அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி எம்.ஏ. ஜெமீலுக்கு, மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுத்தீன் தொடர்ந்தும் முன்னிலை வழங்கினால், தான் முஸ்லிம் காங்கிரசில் இணைய நேரிடலாம் என்று, தனக்கு நெருக்கமானவர்களிடம் கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசில் அங்கம் வகிக்கும் சிராஸ் மீராசாஹிப், அமைச்சர் றிசாத் பதியுத்தீனுடைய அமைச்சின் கீழுள்ள லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் பதவியை தற்போது வகித்து வருகின்றார்.

மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவர் கலாநிதி எம்.ஏ. ஜெமீல் – சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவர். சிராஸ் மீராசாஹிபும் சாய்ந்தமருதைச் சேர்ந்தவராவார். இந்த நிலையில், ஜெமீலுடன் சிராஸ் நீண்ட காலமாக முரண்பட்டு வருகின்றார். இருவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதும், ஜெமீலுடன் இணைந்து செயற்படுவதில் சிராஸுக்கு விருப்பமில்லை.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், தன்னை விடவும் ஜெமீலை – அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் றிசாத் பதியுதீன் முன்னிலைப்படுத்துவதாக சிராஸிடம் ஒரு மனப்பதிவு உள்ளது. அதனால்தான், கட்சித் தலைமை ஜெமீலை தொடர்ந்தும் முதன்மைப்படுத்தினால், தான் முஸ்லிம் காங்கிரசிஸ் இணைய வேண்டி ஏற்படும் என்று, தனக்கு நெருக்கமானவர்களிடம் சிராஸ் கூறியுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் மூலம் தேர்தலில் போட்டியிட்டு கல்முனை மாநகரசபையின் மேயரான சிராஸ் மீராசாஹிப், பின்னர் அந்தக் கட்சியிலிருந்து விலகி அப்போதைய அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸில் இணைந்தார். பின்னர் மிகக் குறுகிய காலத்தில் அந்தக் கட்சியிலிருந்து விலகிய அவர், அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்தார்.

அமைச்சர் றிசாத் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்ட காலப் பகுதியிலேயே, அம்பாறை மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர் ஒருவர் மூலமாக, முஸ்லிம் காங்கிரசில் இணைவதற்கான தனது விருப்பத்தினை, அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு சிராஸ் மீராசாஹிப் தெரியப்படுத்தினார்.

அந்த வேளையில், முஸ்லிம் காங்கிரஸுக்குள் பசீர் சேகுதாவுத் மற்றும் ஹசனலி ஆகியோர் தொடர்பான பாரிய பிரச்சினைகள் நிலவியமையினால், மு.காங்கிரசில் சிராஸை சேர்ந்துக் கொள்வதில் மு.கா. தலைவர் ஹக்கீம் ஆர்வம் காட்டவில்லை.

இதனால், அகில இலங்கை மக்கள் காங்கிரசிலேயே தொடர்ந்தும் இருக்க வேண்டிய நிலை சிராஸுக்கு ஏற்பட்டது.

இவை இப்படி இருக்கத்தக்க நிலையிலேயே, தற்போது மீண்டும் மு.கா.வில் இணையப் போவதாக, தனக்கு நெருக்கமானவர்களிடம் சிராஸ் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் குறிப்பு: இந்தச் செய்தி தொடர்பாக, சிராஸ் மீராசாஹிப்பினுடைய கருத்தினைக் கேட்டறியும் பொருட்டு, அவருக்கு நாம் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்ட போதும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்