மு.கா. தலைவரின் இஸ்லாமிய விரோத செயற்பாடுகள் தொடர்பில் கண்டனம்; உலமாக்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டுமெனவும் கோரிக்கை
– முன்ஸிப் அஹமட் –
மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், சுதந்திரக் கட்சி மாநாட்டின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இஸ்லாத்துக்கு முரணான வகையில் கையெடுத்துக் கும்பிட்டமை, தற்போது முஸ்லிம் மக்களிடையேயும் சமூக வலைத்தளங்களிலும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது.
மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், சிங்களத் தலைவர்களைச் சந்திக்கும் வேளைகளில் அநேகமாக இவ்வாறு கையெடுத்துக் கும்பிடுவது வழமையாகும்.
இஸ்லாத்துக்கு முரணாக வகையில் இப்படி கையெடுத்துக் கும்பிட வேண்டாம் என்று, மு.கா. தலைவருக்கு பல்வேறு தடவை அறிவுரை வழங்கப்பட்டிருந்த போதும், அவற்றினை ஹக்கீம் கணக்கில் எடுக்காமல் இவ்வாறு கும்பிட்டு வருகின்றார்.
அம்பாறை மாவட்டத்தின் முக்கிய முஸ்லிம் ஊடகவியலாளர்கள் இருவர் 2015ஆம் ஆண்டு, கல்முனை பிரதேசத்தில் ஹக்கீமை சந்தித்த போது; கையெடுத்துக் கும்பிடும் பழக்கத்தை கை விட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தனர். முஸ்லிம்களின் தலைவர் அல்லது முஸ்லிம் கட்சியொன்றின் தலைவர் எனும் அடையாளத்துடன் இருக்கும் நீங்கள் செய்கின்ற காரியங்கள் எல்லாவற்றினையும், மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்துடன் தொடர்புபடுத்திப் பார்ப்பார்கள் என்றும், எனவே இஸ்லாத்துக்கு முரணான வகையில் கையெடுத்துக் கும்பிடும் பழக்கத்தைக் கைவிடுங்கள் என்றும், மேற்படி ஊடகவியலாளர்கள் இருவரும் ஹக்கீமை கேட்டுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இருந்த போதும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் புத்திஜீவிகளின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களைத் தட்டிக் கழித்து விட்டு, இஸ்லாத்துக்கு மாற்றமான செயற்பாடுகளில் மு.கா. தலைவர் ஹக்கீம் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றமை கவலைக்குரியதாகும்.
சில நாட்களுக்கு முன்னர் கடுவெல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ரஊப் ஹக்கீம்; கடவுளால் தீர்க்க முடியாத பிரச்சினைகளும் உள்ளன என்று கூறியிருந்தமையும் நினைவுகொள்ளத்தக்கது. இந்தக் கருத்தானது இஸ்லாமிய நம்பிக்கைக்கு முரணானதாகும்.
எனவே, மு.கா. தலைவர் மேற்கொண்டுவரும் மேற்படி இஸ்லாமிய விரோத செயற்பாடுகள் குறித்து, இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் (உலமாக்கள்) தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடப்படுகின்றன.
தொடர்பான செய்தி: கடவுளால் தீர்க்க முடியாத பிரச்சினைகளும் உள்ளனவாம்; இஸ்லாமிய நம்பிக்கைக்கு முரணாக ஹக்கீம் கருத்து