அமர்வுக்கு வராத, நாடாளுமன்ற உறுப்பினர்கள்; ஆறுமுகன் சாதனை

🕔 September 5, 2017

நாடாளுமன்றில் மூன்று மாதங்கள் 21 சபை அமர்வுகள் நடைபெற்ற போதும், அவற்றில் 18 உறுப்பினர்கள், 05 க்கும் குறைவான அமர்வுகளில் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

இவ்வருடம் மே மாதம் முதல், ஜுலை மாதம் வரையிலான மூன்று மாதங்களில் இது இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேற்படி மூன்று மாதத்தில் நடைபெற்ற 21 அமர்வுகளிலும் தவறாது கலந்து கொண்டுள்ளனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், குறித்த 21 அமர்வுகளில் 01 அமர்வில் மட்டுமே கலந்து கொண்டார்.

ராஜாங்க அமைச்சர் மொஹான்லால் கிரேரு மற்றும் ஐ.ம.சு.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர ஆகிய இருவரும் 21 அமர்வுகளில் இரண்டுக்கு மட்டும் சமூகமளித்திருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சுதந்திரக் கட்சியின் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் அமைச்சர் பழனி திகாம்பரம் உள்ளிட்ட 07 பேர் 04 அமர்வுகளில் கலந்து கொண்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவபெரும, ஜோன்ஸ்டன் பெனாண்டோ, கீதா குமாரசிங்க உள்ளிட்ட 08 உறுப்பினர்கள், 05 அமர்வுகளில் மட்டும் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வுகளுக்குச் சமூகமளிப்பதை ஊக்குவிக்கும் வகையில், அமர்வொன்றில் கலந்து கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழக்கும் கொடுப்பனவினை 500 ரூபாவிலிருந்து 2500 ரூபா வரை, இவ்வருடம் ஆரம்பம் முதல், அரசாங்கம் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்