பெண்கள் வந்தால், அரசியலை இன்னும் செழுமைப்படுத்தலாம்: ரஊப் ஹக்கீம் நம்பிக்கை
– முன்ஸிப் அஹமட் –
பெண்கள் அரசியலுக்கு வருவதன் மூலம், தற்போதைய அரசியலை இன்னும் கொஞ்சம் செழுமைப்படுத்த முடியும் என்று முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.
மேலும், அரசியலுக்குள் பெண்கள் வருவதில் எவ்வித தவறுகளையும் – தான் காணவில்லை எனவும் அவர் கூறினார்.
அட்டாளைச்சேனையில் கடந்த வாரம் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவற்றினைக் குறிப்பிட்டார்.
அண்மையில் நிறைவேற்றப்பட்ட உள்ளுராட்சி தேர்தல் திருத்தச் சட்டத்தின் பிரகாரம், வேட்பாளர் பட்டியலில் 25 வீதம் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என வலிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இது குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே, மேற்கண்ட விடயங்களை மு.கா. தலைவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;
“வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 25 வீதம் வழங்க வேண்டும். அதில் எந்தவிதப் பிரச்சினையுமில்லை. அரசியலுக்குள் பெண்கள் வருவதில் எவ்வித தவறுகளையும் நான் காணவில்லை. அவர்கள் அரசியலுக்கு வருவதன் மூலம் இந்த அரசியலை இன்னும் கொஞ்சம் நாம் செழுமைப்படுத்தலாம்” என்றார்.
அதேவேளை, இவ்வாறு – தான் கூறுகின்றமையினை உலமாக்கள் (இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள்) மன்னிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.