அம்பாறை மாவட்டத்தில் அனைத்து உள்ளுராட்சி சபைகளையும் முஸ்லிம் கூட்டமைப்பு கைப்பற்றும்: பஷீர் சேகுதாவூத் நம்பிக்கை

🕔 September 4, 2017

திர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் சபைகளையும் முஸ்லிம் கூட்டமைப்பு  கைப்பற்ற கூடிய வாய்ப்பு கண் முன் தெரிகின்றது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், தூய முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவருமான முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

தூய முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று மத்திய குழுவினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்று, நேற்று ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்றில் இடம்பெற்றது. தூய முஸ்லிம் காங்கிரசின் அக்கரைப்பற்று மத்திய குழு தலைவர் தொழிலதிபர் நஸார் ஹாஜி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்ட விடயத்தை பசீர் சேகுதாவூத் கூறினார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஏ.எல். அப்துல் முனாப் மற்றும் ஐ.எல்.எம். நஸீர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இங்கு தூய முஸ்லிம் காங்கிரஸ் செயற்பாட்டாளர்களின் கருத்துக்கள், கேள்விகளை கியவற்றை செவிமடுத்த பிற்பாடு தெளிவூட்டல் வழங்கி உரையாற்றியபோது பஷீர் சேகு தாவூத் மேலும் தெரிவிக்கையில்;

“தூய முஸ்லிம் காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சி அல்ல. இது ஓர் அணி ஆகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் இரு அணிகள் காணப்படுகின்றன. ரவூப் ஹக்கீம் தலைமையிலான தீய முஸ்லிம் காங்கிரஸ் அணிக்கு எதிரானதாக தூய முஸ்லிம் காங்கிரஸ் அணி உள்ளது.

நாம் தீய முஸ்லிம் காங்கிரஸ் அணிக்கு எதிரானவர்களே அன்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரானவர்கள் அல்லர். இன்னும் சொல்லப் போனால் பஷீர் சேகு தாவூத் ஆகிய நான், ஹசன் அலி, நஸார் ஹாஜியார், அன்சில், தாஹிர் ஆகியோர் இப்போதுகூட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களாகவே உள்ளோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆயுள் கால உறுப்பினர்களாகத்தான் இப்போதும், எப்போதும் இருக்கின்றோம். அதாவுல்லா, றிசாத் பதியுதீன், ஹிஸ்புல்லா போன்றவர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்தவர்களே ஆவர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்காரர்களில் பல ரகத்தினர் உள்ளனர். ஒரு தொகையினர் ஆரம்பம் முதல் இப்போது வரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு உள்ளே உள்ளனர். ஒரு தொகையினர் ஆரம்பம் தொட்டு செயற்பட்டு இடையில் வெளியேற்றப்பட்டனர் அல்லது வெளியில் வந்தனர். இன்னும் சிலர் இடையில் இணைந்து ஒட்டி கொண்டு நிற்கின்றனர். இன்னும் சிலர் உள்ளே வருவதும், வெளியே போவதுமான செயற்பாட்டை மாறி மாறி செய்பவர்களாக உள்ளனர். கிழக்கு மாகாண முதலமைச்சர் இதற்கு பொருத்தமான உதாரணமாவார்.

சட்டத்தரணியாகவும், மும்மொழி புலமை உள்ளவராகவும், ஸ்தாபக தலைவர் அஷ்ரப் போல வெள்ளை நிறமானவராகவும் காணப்பட்டமையினாலேயே ரவூப் ஹக்கீம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக கொண்டு வரப்பட்டார். ரவூப் ஹக்கீம் பிழையான பாதை ஊடாக செல்கின்றார் என்பதை 2004 ஆம் ஆண்டிலேயே நாம் கண்டு பிடித்து விட்டோம். ரவூப் ஹக்கீமின் போக்குக்கு எதிராக அதாவுல்லா கிளம்பியபோது கட்சிக்கு உள்ளே இருந்தே எதிர்க்க வேண்டும் என்பதால்தான் அவரின் எதிர்ப்பு நடவடிக்கைகளை எதிர்த்தோம். இருந்தபோதும் கட்சிக்கு உள்ளே இருந்து ரவூப் ஹக்கீமை நாம் அடிக்கடி எதிர்த்து வந்திருக்கின்றோம். கட்சியின் உயர்பீட கூட்டங்களில் அவரின் பிழைகளை பகிரங்கமாகவும், வெளிப்படையாகவும் சுட்டி காட்டி பேசினோம். இந்நிலையில்தான் உயர்பீட கூட்டங்களில் எமது பேச்சுக்களை குழுக்களை வைத்து தடுக்க ரவூப் ஹக்கீம் முயன்றார். இதனால்தான் நாம் வேறு வழி இல்லை என்கிற நிலையில் மக்கள் முன் வர நேர்ந்தது.

கடந்த 17 வருடங்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக செயற்பட்டு வருகின்ற ரவூப் ஹக்கீம் அவரின் தனிப்பட்ட நன்மைகளை உத்தேசித்து மாத்திரமே தீர்மானங்களை எடுக்கின்றார். முஸ்லிம் சமூகத்தின் நன்மைகளை முன்னிறுத்தி செயற்படுபவராக அவர் இல்லவே இல்லை. அவருக்கு பாதகமாக அமையலாம், பாதிப்பை கொடுக்கலாம் என்று அவர் நினைக்கின்ற விடயங்களில் நழுவல் போக்கையே கைக்கொள்கின்றார். அதனால் சமுதாயத்தை அடகு வைக்கின்றார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் என்கிற பதவி மூலமாக வரங்கள், வரப்பிரசாதங்கள், நன்மைகள், சலுகைகள் ஆகியவற்றை அனுபவித்து வருகின்ற இவர், கட்சிக்காக ஒரு ஐஸ் கிறீமை, ஒரு கோழி குஞ்சை கொடுத்து இருப்பாரா? ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அவருடைய தனிப்பட்ட சொத்து என்று நினைத்து நடக்கின்றார். மேலும் இவர் உச்சபட்ச ஜனநாயக விரோத நடவடிக்கையாகவே கட்சி உயர்பீடத்துக்கு அரைவாசிக்கும் அதிகமான தொகையினரை பெயர் சொல்லி நியமிக்கின்ற அதிகாரத்தை பிடித்து வைத்திருக்கின்றார். இவ்வாறான ஒரு ஜனநாயக விரோத செயற்பாடு எந்தவொரு கட்சியிலும் கிடையாது.

கிழக்கு மாகாணத்தவர் அல்லாத ரவூப் ஹக்கீம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக இருக்க முடியாது. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக இருக்க முடியும் என்று நாம் இன்று கூறுவது கடந்த கால அனுபவங்கள், படிப்பினைகள் ஆகியவை மூலமாக பெற்று கொண்ட பாடங்களை வைத்து கொண்டுதான். மாறாக இது பிரதேசவாதம் அல்ல. தந்தை செல்வா இலங்கை தமிழர் அல்லர். அவர் ஒரு இந்துவும் அல்லர். ஆனால் அவர் இலங்கை தமிழ் மக்களின் நன்மைக்காக உடல், பொருள், ஆவி ஆகியவற்றை அர்ப்பணித்து பற்றுறுதியுடன் இறுதி வரை செயற்பட்டார் என்பதாலேயே இலங்கை தமிழ் மக்களால், குறிப்பாக வட மாகாண தமிழ் மக்களால் தந்தையாக கொண்டாடப்படுகின்றார். விடுதலை புலிகள்கூட தந்தை செல்வாவுக்கு எதிராக எந்தவொரு கருத்தையும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்வைத்தது கிடையாது. ஆனால் ரவூப் ஹக்கீம் – இலங்கை முஸ்லிம் சமூகத்தின் நன்மைக்காக செயற்படுபவராக இல்லை.

நான் என் சார்ந்த சமூகத்துக்கு செய்ய வேண்டிய தார்மீக கடமைகள் இருக்கின்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ரவூப் ஹக்கீமை விரட்டி துரத்த வேண்டும். தலைவர் அஷ்ரப்பின் மரணத்தில் மறைந்து உள்ள மர்மத்தை வெளியில் கொண்டு வர வேண்டும். தனிநபர்களின் கைகளில் சிக்கி உள்ள தாருஸ்ஸலாமை மீட்டு கொடுக்க வேண்டும். இவற்றுக்கு வேண்டிய சட்ட நடவடிக்கைகளுக்காக எனது சொந்த பணத்தையும் செலவு செய்து வருகின்றேன். எனது முயற்சியில் இறைவனின் துணையுடன் நிச்சயம் வெற்றி அடைவேன். சரியான தருணம் வருகின்றபோது ரவூப் ஹக்கீம் சம்பந்தப்பட்ட அந்தரங்க சி.டி.களை நிச்சயம் வெளியிடுவேன். அதில் அவசரம் காட்ட மாட்டேன்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே முஸ்லிம் மக்களின் கட்சி என்பது யதார்த்தமான உண்மை ஆகும். அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸாக இருந்தாலும் சரி, றிசாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸாக இருந்தாலும் சரி, ஏனைய முஸ்லிம் கட்சிகளாயினும் சரி, தனிநபர் செல்வாக்கிலேயே ஓடிக் கொண்டு இருக்கின்றன. எனவே நாம் கூட்டமைப்பு அமைக்காமல் பிரிந்து நின்று செயற்படுவோமாயின், அது – ரவூப் ஹக்கீமின் தீய முஸ்லிம் காங்கிரஸுக்கு வாய்ப்பாகி விடும். இதனால்தான் நாம் அனைவரும் கூட்டணி அமைத்து தூய முஸ்ஸிம் காங்கிரஸ் அணியினராக மக்கள் முன் நிற்க வேண்டி உள்ளது. தீய முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கு அம்பாறையில் சரிந்து இறங்குமுகமாக சென்று கொண்டிருக்கின்றது. இந் நிலையில் நாம் ஒன்றுபட்டு கூட்டமைப்பாக தேர்தல் கேட்கின்றபோது அனைத்து முஸ்லிம் சபைகளையும் எம்மால் கைப்பற்ற முடியும் என்பது திண்ணம். ரவூப் ஹக்கீம் துண்டை காணோம், துணியை காணோம் என்று ஓடி விடுவார்.

எனவே அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களுக்கு சரியான அறிவூட்டல்கள், தெளிவூட்டல்கள் ஆகியவற்றை கொடுத்து ரவூப் ஹக்கீம் தலைமையிலான காங்கிரஸை ஒரே ஒரு முறை மாத்திரம் தேர்தலில் தோற்கடிக்க வேண்டி உள்ளது. அதன் பின் எமது முஸ்லிம்ட காங்கிரஸ் எமக்கு கிடைத்து விடும் என்பதில் எனக்கு பரிபூரண நம்பிக்கையும், விசுவாசமும் உள்ளது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்