மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மைத்திரி விசேட அழைப்பு; ஹெலிகொப்டரும் வழங்கி வைப்பு: கொழும்பு பறந்தார் அதாஉல்லா
– அஹமட் –
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் விசேட அழைப்பின் பேரில், அந்தக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் இலங்கை விமான படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் மூலம் கொழும்பு பயணமானார்.
மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த பின்னர், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐ.ம.சு.முன்னணியில் தேசிய காங்கிரஸ் பங்காளிக் கட்சியாக இணைந்து கொண்டமையினை அடுத்து, மைத்திரியின் மேடைகளில் அதாஉல்லா பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுதந்திரக் கட்சியின் கடந்த மே தின கூட்டத்திலும், முன்னாள் அமைச்சர் அதாஉல்லா கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.
இந்த நிலையில், சுதந்திரக் கட்சியின் 66ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசி மூலம் விசேட அழைப்பொன்றினை விடுத்திருந்தார். மேலும், அதாஉல்லாவை அழைத்துச் செல்வதற்காக விமானப்படையின் ஹெலிகொப்டர் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, அக்கரைப்பற்றிலிருந்து மட்டக்களப்பு சென்ற அதாஉல்லா, அங்கிருந்து கொழும்பு பயணமானார்.