மியன்மார் விடயம் தொடர்பாக, இலங்கையிலுள்ள முஸ்லிம் நாட்டுத் தூதுவர்களை சந்திக்க வேண்டும்: அதாஉல்லா

🕔 August 31, 2017
மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் மனிதாபிமானமற்ற கொடுமைகளை நிறுத்துமாறு, இலங்கை அரசாங்கம் மியன்மாரை வலியுறுத்த வேண்டும் என்று, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இலங்கையிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களை சந்தித்து, மியன்மார் முஸ்லிம்கள் விவகாரத்தில் தலையிடுமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்களை அவர் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;

“மியன்மார் ரோஹிங்ய முஸ்லிம்கள், பாரம்பரியக் குடிகளாக அங்கு வாழ்ந்திருந்தும் முஸ்லிம்கள் என்பதற்காகவே சொல்லொன்னா அவலங்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். மனித உரிமை மீறல், அகதிகள்  விவகாரம் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உலகில் பல நிறுவனங்கள் இருந்தும், மியன்மாரில் நடைபெறும் முஸ்லிம்களுக்கு எதிரான கொலைகளை அந் நிறுவனங்கள் இதுவரை கண்டு கொள்ளவில்லை என்பது கவலையளிக்கிறது.

மியன்மார் அரசாங்கமும் ராணுவமும் சேர்ந்துதான் அங்குள்ள முஸ்லிம்களுக்கு எதிராக இந்த அநியாயத்தைக் கட்டவிழ்த்து விட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும். பௌத்த மக்கள் நல்லவர்களாக இருந்தும், பௌத்த இனவாதம் திட்டமிட்டுத் தோற்றுவிக்கப்பட்டு இந்த அவலம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. முஸ்லிம் உம்மத்து என்ற வகையில் மாத்திரமல்லாமல் மனித குலத்தையே இந்த அவலம் அதிரவைத்திருக்கிறது.

அரபு – முஸ்லிம் உலகத்தில் மியன்மார் துயரங்களுக்கு எதிராக துருக்கியினுடைய தலைவர் அதுர்கான் விடுத்திருக்கும் காத்திரமான அறிக்கையைத் தவிர, வேறு எந்த அரபு – முஸ்லிம் நாடுகளின் தலைமைகளும் இதனைக் கண்டு கொள்ளவில்லை.

அதுர்கானுக்கு பாராட்டுக்குரியவர். நமக்கு அண்மையில் உள்ள பாகிஸ்தானின் உடன்பிறப்புகளும் மியன்மார் கொலைகளுக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. இவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரியட்டும். இவர்களுடைய குரலுக்கு சக்தி கொடு என்று ஆண்டவனைக் கேட்கிறேன். எங்களுடைய பேராதரவு அவர்களுக்கு உண்டு என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

இது இவ்வாறிருக்க, மியன்மாரிலிருந்து அசின்விராதுவை தேரரை ஞானசார தேரர் இலங்கைக்கு அழைத்து வந்தமையை இங்கு நினைவு கொள்ள வேண்டியுள்ளது. இந்நாட்டு முஸ்லிம்கள் அதனை மறந்திருக்க மாட்டார்கள்.

இது ஒருபுறமிருக்க, அண்மைக்காலமாக நம் நாட்டு முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வரலாற்று துயரத்திலிருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை. ரோஹிங்காவின் இன்றைய நிலைமையைப் போன்று இலங்கையிலும் ஒரு சூழ்நிலையை உருவாக்கமாட்டார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதங்களுமில்லை. இதற்கிடையில் ஏலவே பௌத்த, இந்து பேரினவாதம் இந்நாட்டில் முஸ்லிம்களை கிள்ளுக் கீரையாக்கிக் கொண்டிருக்கிறது.   இத்தருணத்தில் முஸ்லிம்களாகிய நமது நடவடிக்கைகளும் மேற்சொன்னவர்களுக்கு தீனி போடுவதாய் அமையக்கூடாது. சூடு கண்ட பூனைகள் நாங்கள்.

எனவே முஸ்லிம் உடன்பிறப்புகளே,முதலில் முடியுமானவரை எல்லா இடங்களிலிருந்தும் துஆப் பிரார்த்தனை செய்யுங்கள். வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையிலும் பின்னரும் இலங்கை முழுவதுமுள்ள முஸ்லிம் உம்மாக்கள் அல்லாஹ்விடம் அழுது துஆக் கேளுங்கள்.

இந்த நாட்டின் பௌத்த மக்கள் கருணை உள்ளவர்கள் என்பதால் மத, இன பாகுபாடுகளுக்கு அப்பால் சென்று, மியன்மாரியல் நடைபெறும் மனிதாபிமானமற்ற கொடுமைகளை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கம் மியன்மாரை வலியுறுத்த வேண்டும்.

நமக்கொரு கடமை இருக்கிறது. இந்த நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் – அரபுலக நாடுகளின் தூதுவர்களையும் சந்தித்து, அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் தூங்கிக் கிடக்கின்ற அவரவர்களது நாட்டுத் தலைமைகளை மியன்மார் விடயத்தில் தட்டியெழுப்ப வேண்டும்.

வல்லரசுகள் என்று வாய்கிழியப் பீத்தும் அமெரிக்க, ரஷ்யா போன்ற நாடுகள் இவ்வாறான கொடுமைக்கு ஆதரவாகவோ அல்லது கண்டிராமல் இருப்பதுபோல் நடிப்பதுவோ, அவர்கள் மனித குலத்தின் பலவீனர்கள் என்பதனை காட்டி நிற்கிறது. இவற்றினையும் அவர்களின் முகத்தில் எடுத்தியம்ப வேண்டிய தருணமும் வந்திருக்கிறது.

எது செய்வதாக இருந்தாலும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் நன்கு தீர்மானித்து ஒரு பொதுச் சபை வழிகாட்டும் அடிப்படையில்தான் நமது நடவடிக்கைகள் அமைய வேண்டும். மாறாக  எடுத்தாற்போல் கண்டனம், போராட்டம் நடத்துகின்றவர்களோடு அள்ளுப்பட்டுச் செல்ல வேண்டாம் என என் உடன்பிறப்புகளை அன்பாய் வேண்டிக் கொள்கிறேன்.

இதற்கு கட்சி வேறுபாடுகளுக்கப்பால் நமது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவசியப்படுகின்ற புத்திஜீவிகளுமாக ஒன்று சேர்ந்து, மேற்சொன்ன நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்வந்து செயற்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். மக்கள் அதற்கான அழுத்தங்களைக் கொடுக்கும்படி வேண்டுகிறேன்.

இளைஞர்கள், முகநூல் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் இதனைப் பக்குவமாக கையாள வேண்டுமென்பதனையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்