மியன்மார் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்; ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அமைச்சர் றிசாட் கடிதம்

🕔 August 30, 2017

மியன்மாரிலுள்ள ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது அந்த நாட்டு ராணுவம் நடத்திவரும் காட்டுமிராண்டித்தனமான, எல்லைமீறிய வன்முறைகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் வன்மையாக கண்டித்துள்ளார்.

மியன்மார் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும், திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பை சர்வதேச சமூகமும், ஐ.நாடுகள் சபையும் கண்டும் காணாததுபோல் இருப்பது வேதனையானது  எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, மியன்மார் வன்முறைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு, இலங்கையிலுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

“சுமார் 400 அல்லது 500 வருடங்களுக்கும் மேலாக மியன்மாரில் பாரம்பரியமாக வாழும் இந்த முஸ்லிம்கள் அனைவரையும் வெளியேற்றுவதற்கு மியன்மார் அரசு, தனது அத்தனை பலங்களையும் பிரயோகித்து வருகின்றது. இந்த முஸ்லிம்களில் அநேகர் மியன்மாரினை விட்டும் வெளியேறி, சுமார் 17 நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

எஞ்சியிருக்கும் முஸ்லிம்களை அழிக்கும் நடவடிக்கைகளையே மியன்மார் அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வருகின்றது.
1991ம் ஆண்டு உலக சமாதான நோபல் பரிசு பெற்றவரும், ஜனநாயக கட்சியின் தலைவரும், நிழல் பிரதமருமான ஆங்சாங் சூகி, மியன்மார் தாக்குதலுக்கு துணைபோவது பல்வேறு கேள்விகளை எழச்செய்துள்ளது.

இந்த தாக்குதல் ஜனநாயகத்துக்கு விடுக்கும் எச்சரிக்கையா
? அல்லது உலக முஸ்லிம்களுக்கு மறைமுகமாக விடுக்கும் அச்சுறுத்தலா? எனவும் எண்ணத் தோன்றுகின்றது.

மியன்மார் அரசின் ஆதரவில் நடத்தப்பட்டுவரும் மனித உரிமை மீறல் தொடர்பில், சர்வதேசம் இன்னும் மௌனமாக இருப்பது ஏன்? ஐக்கியநாடுகள் சபை கண்டும் காணாதது போல குருடாகவும், செவிடாகவும் இன்னும் இருக்காமல், இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களையும்,  அநியாயங்களையும் நிறுத்துவதற்கு தனது பலத்தை பிரயோகிக்கவேண்டும்” எனவும் அமைச்சர் ரிஷாட் வலியுறுத்தியுள்ளார்.

ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு நிரந்தரமான தீர்வு கிடைத்து அவர்கள் நிம்மதியாக வாழ, ஹஜ் கடமையினை நிறைவேற்றும் அனைத்து முஸ்லிம்களும் புனித அறபா தினத்தன்று நோன்பு நோற்று, பிரார்த்தனை செய்யுமாறும்  அமைச்சர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments