அட்டாளைச்சேனையில் ஹக்கீம்; அப்பவும், இப்பவும்: மணக்கத் தொடங்கும் தோல்வியின் வாசம்

🕔 August 28, 2017

– முன்ஸிப் அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் கலந்து கொண்ட பொதுக்கூட்டம், அவருக்கு பெரும் ஏமாற்றமளிப்பதாகவே அமைந்திருந்ததாகத் தெரியவருகிறது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தலைமையில் நேற்றைய கூட்டம் நடந்தது.

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவதாக வாக்குறுதியளித்து விட்டு, இரண்டு வருடமாக ஏமாற்றிவரும் ரஊப் ஹக்கீமுக்கு, நேற்றைய தினம் அட்டாளைச்சேனை மக்கள், வழமையான வரவேற்புகள் எவற்றினையும் வழங்கவில்லை.

மேலும், ஹக்கீம் மேடையில் பேசும் போது, அட்டாளைச்சேனைக்கு உரிய நேரத்தில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கப்படும் என்றார். இதன்போது, கூட்டம் பார்க்க வந்த மக்கள் மத்தியில் கடுமையான சலசலப்பு ஏற்பட்டது. மக்கள் மத்தியில் இருந்த ஒருவர்; “நாடாளுமன்றம் கலைந்த பிறகா, அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டில் தருவீர்கள்” என்று சத்தமாக கேட்டு, ஹக்கீமை அசிங்கப்படுத்தினார்.

அட்டாளைச்சேனையில் நேற்று ஹக்கீம் கலந்து கொண்ட பொதுக் கூட்டம், ஹக்கீமுக்கு வெற்றியா தோல்வியா என்று யாரும் விவாதம் நடத்திக் கொண்டிருக்கத் தேவையில்லை. காரணம், நேற்றைய கூட்டம் மிகப் பெரும் தோல்வியென்று ஹக்கீம் மிக நன்கு அறிவார்.

வழமையாக அட்டாளைச்சேனை வரும் போது ஹக்கீமுக்கு, மக்கள் பெருவெள்ளமாக வந்து வழங்கும் வரவேற்று எதையும் நேற்று காண முடியவில்லை.

அமைச்சர் அதாஉல்லாவைப் பற்றி ஹக்கீம் தனது மேடைப் பேச்சுக்களில் நையாண்டித்தனமாகப் பேசும் போது, மு.கா. ஆதரவாளர்கள் சந்தோசத்துடன் கோசமிடுவார்கள். தனது ஆரவாளர்களை கிளுகிளுப்பேற்றுவதற்காகவே அதாஉல்லாவை ஹக்கீம் குத்தலாக பேசுவார். ஆனால், நேற்று ஹக்கீம் எவ்வளவுதான் அதாஉல்லாவை நையாண்டி செய்ய முயற்சித்தபோதும், மக்கள் பழைய மாதிரி எதிர் வினையாற்றவில்லை.

மிக நன்றாகவும், நேர்மையாகவும் நேற்றைய கூட்டத்தை அலசிப் பார்ப்பவர்களுக்கு, பல உண்மைகள் தெரியத் தொடங்கியிருக்கின்றன.

நேற்றைய கூட்டத்தில், ஹக்கீம் தன்னுடைய வீழ்ச்சியின் ஏதோவொரு புள்ளியை தரிசித்திருப்பார். எதிர்காலத்தில் ஏற்படப் போகும் தோல்வியின் மெல்லிய வாசத்தை நுகர்ந்தவாறுதான் ஹக்கீம் கொழும்பு திரும்பியிருப்பார் என்பதை, அவரின் முகம் காட்டிக் கொடுத்தது.

அட்டாளைச்சேனையில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் ஹக்கீம் கலந்து கொள்ளும் போது, கடந்த காலங்களில் அவருக்குக் கிடைத்த வரவேற்புகள் எப்படியிருந்தன என்பதையும், நேற்று எப்படியிருந்தது என்பதையும், ஒரே பார்வையில் காண்போம்.

Comments