நுகர்வோர் அதிகார சபையின் சுற்றி வளைப்பு நடவடிக்கைள் வளர்ச்சி; பெருந்தொகை தண்டப் பணமும் அறவீடு
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள், கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி பெற்றிருப்பதாக அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரையின் கீழ், அதிகார சபையின் தலைவர் ஹஸித்த திலகரட்ன அவர்களின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள், மேலும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2016ம் ஆண்டு 33 சதவீதம் அதிக சுற்றிவளைப்புகள் இடம்பெற்றதாகவும், 2016ம் ஆண்டு முதல் காலாண்டு இரண்டுடன் ஒப்பிடுகையில் 2017ம் ஆண்டு முதல் காலாண்டு இரண்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு 15.9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. அத்துடன் 46.7 மில்லியன் ரூபாய் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் அதிகார சபையின் புலனாய்வுப் பிரிவினர், தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சட்டரீதியற்ற வகையில் போத்தலில் குடிநீர் அடைக்கப்படும் தொழிற்சாலைகளை சுற்றிவளைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
கம்பஹாவில் விற்பனைக்குதவாத சுமார் 1.5 கோடி ரூபா பெறுமதியுள்ள 50ஆயிரம் கிலோகிராம் வெள்ளைப்பூண்டு கைப்பற்றப்பட்டு, கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. குறிப்பிட்ட தொகை வெள்ளைப்பூண்டு அழிக்கப்பட்டதுடன் குற்றவாளியாக காணப்பட்ட வர்த்தகருக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது.
கொழும்பில் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காலாவாதியான 17,500 கிலோகிராம் வெள்ளைப்பச்சரிசி, பொதியிடப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டு குறித்த வர்த்தகருக்கு சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டது
கந்தகம் கலக்கப்பட்ட 2.5மில்லியன் பெறுமதி வாய்ந்த 4525 கிலோகிராம் கொத்தமல்லி கைப்பற்றப்பட்டு, அதற்கான மாதிரிகள் பரீசிலனைக்காக கைத்தொழில் நிறுவனத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதைத் தவிர, பொருட்களின் விலை காட்சிப்படுத்தப்படாமை, நுகர்வோரை பிழையாக வழிநடத்தியமை, நுகர்வோருக்குப் பற்றுச்சீட்டு வழங்காமை ஆகியவை தொடர்பிலும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்டத்தின் கீழ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதிலும் அரிசி, குடிநீர், தேங்காயெண்ணெய், பால், சீரகம், மென்குளிர்பானங்கள், நெத்தலி, குரக்கன்மா, கொத்தமல்லி மற்றும் டின்மீன், ஆகிய பொருட்கள் ராசாயனப் பகுப்பாய்வு திணைக்களம், கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனங்கள், அங்கீகரிக்கப்பட்ட ரசாயன ஆய்வுகூடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு நுகர்வோரின் நலன்களைப் பேணும் வகையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன என்றும் அந்த சபை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.