கட்டிப் பிடித்து, கை குலுக்கிக் கொண்ட மேர்வினும் நாமலும்; சண்டைக்கு பிறகு மலர்ந்த உறவு

🕔 August 19, 2017

ராஜபக்ஷக்களுக்கும், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கும் ஏற்பட்ட சண்டை, பகை மற்றும் நீண்ட கால பிரிவின் பின்னர், நேற்று வெள்ளிக்கிழமை இரவு, மேர்வின் சில்வாவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் சந்தித்துக் கொண்டனர்.

இதன்போது, இருவரும் ஒருவரையொருவர் கட்டியணைத்துக் கொண்டதோடு, ஒருவர் கையை ஒருவர் பிடித்தவாறு உரையாடிக் கொண்டிருந்தனர்.

பிரபல வர்த்தகர் அஜாஸ் என்பவருடைய மகளின் திருமண நிகழ்விலேயே இவர்கள் சந்தித்துக் கொண்டனர்.

இந்த திருமண வைபவத்தில் ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் இராஜ் ரவீந்திர உள்ளிட்டோரும் கலந்து கொண்டார்கள்.

மேர்வின் சில்வாவுக்கும், ராஜபக்ஷகளுக்குமிடையில் ஏற்பட்ட சண்டையொன்று காரணமாக, அவர்களுக்கிடையில் இருந்து வந்த உறவு இல்லாமல் போனது.

மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வாவை, அப்போது ஜனாதிபதியாகவிருந்த மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், கொழும்பிலுள்ள பிரபல ஆடை நிறுவனமொன்றின் வளாகத்தினுள் வைத்து தாக்கியிருந்தனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோசித ராஜபக்ஷவின் பெண் நண்பி ஒருவருடன், மாலக சில்வா உறவு வைத்திருந்தமை காரணமாகவே, அவர் தாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்தினை அடுத்து, ராஜபக்ஷக்களுடனான உறவினை மேர்வின் சில்வா முறித்துக் கொண்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்