நீதியமைச்சை ராஜிநாமா செய்யுமாறு, ஐ.தே.க. செயற்குழு அழுத்தம்; மாட்டேன் என்கிறார் விஜேதாஸ
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்சவை நீதியமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு ஐ.தே.கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆயினும், தற்போது அவர் வசமுள்ள புத்த சாசன அமைச்சினை தொடர்ந்தும் அவரே வகிப்பதற்கு, தமக்கு எதுவித ஆட்சேபனைகளுமில்லை என்றும், செயற்குழு தெரிவித்துள்ளது.
‘ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை மீளப் பெற்றுக் கொள்ளும் வரை, நான் ஓயப் போவதில்லை’ என்று, அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, ஊடகங்களுக்குத் தெரிவித்தமை மூலம் அரசாங்கத்தை அவமானப்படுத்தியமை, குறித்த சில சட்டங்களை உருவாக்கத் தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், விஜேதாஸவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், விஜேதாச ராஜபக்சவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் அறிக்கையொன்றினை சமர்ப்பிப்பதற்கு மூன்று பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்த குழுவின் அறிக்கை நாளை மறுதினம் திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படும்.
எவ்வாறாயினும், அமைச்சுப் பதவியை தான் ராஜிநாமா செய்யப் போவதில்லை என்று, விஜேதாஸ ராஜபக்ஷ கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்பான செய்தி: விஜேதாஸவுக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணை; சொந்தக் கட்சியின் செயற் குழுவில், ஏகமனதாக நிறைவேற்றம்