தேர்தலில் குதிக்குமாறு மஹிந்தவுக்கு அறிவுரை கூறியவர், தான்தான் என்கிறார் சரத் என். சில்வா
– அஷ்ரப் ஏ. சமத் –
மைத்திரி – ரணில் இணைந்து உருவாக்கியுள்ளது, ஓர் அச்சாறு அரசாங்கமாகும் என்று முன்னாள் பிரதம நீதியரசா் சரத் என் சில்வா தெரிவித்தாா்.
மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான சிங்கள கலைஞா்களின் ஒன்று கூடல் நிகழ்வொன்று, நேற்று வெள்ளிக்கிழமை, கொழும்பு நுாலக கேட்போா் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, முன்னாள் பிரதம நீதியரசர் மேற்கண்டவாறு கூறினார்.
இதேவேளை, மைத்திரிபால சிறிசேன – ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட காட்சிகள், ஒரு நாட்டியம்போன்று தனக்குத் தென்பட்டதாகவும், இதன்பொது அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், சரத் என். சில்வா மேலும் கூறுகையில்;
“நான் பிரதம நீதியரசராக இருக்கும் போது, இரண்டு ஜனாதிபதிகள், என்முன் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர். அவை, கம்பீரமான முறையில் இடம்பெற்றன. இவ்வாறு இடம்பெறுவதுதான, உலக நாடுகளிலும் சம்பிரதாய முறையாக உள்ளது.
ஆனால், மைத்திரிபால சிறிசேன – ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் எடுத்த காட்சிகள், ஒரு நாட்டியம் போன்று எனக்குத் தென்பட்டது.
ஜனாதிபதியாகுவதற்கு முன்பே, பிரதம நீதியரசா் ஒருவரைக் கொண்டு வந்து, அவர் சத்தியப் பிரமாணம் செய்தாா். அதே இடத்தில், 45 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ரணிலுக்கு, பிரதமா் பதவியையும் வழங்கினாா். 125க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினா் இருந்தபோது, வலுக்கட்டாயமாக, ரணில் பிரதமரானார்.
இந்த அரசாங்கத்தினை இப்படியே விட்டுவிட்டால், நாட்டுக்கு பாரிய இழப்பாக அமைந்து விடும். அதனால்தான், மஹிந்த ராஜபக்ஷவை – நான் உடனடியாக அழைத்து, ‘நீங்கள் ஹம்பாந்தோட்டையில் உள்ள மெதமுல்ல வீட்டில் இருந்தால், உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிடும். ரணில் விக்கிரமசிங்க – குற்றவியல் பொலிஸ் பிரிவை பயன்படுத்தி, உங்களையும், உங்கள் குடும்பத்தவர்களையும் பிடித்து சிறைக்குள் போட்டுவிடுவாா். எனவே, உடனடியாக தோ்தலில் குதித்து, நாட்டைக் கைப்பற்றி – நல்லமுறையில் ஆட்சியைக் கொண்டு செல்லுங்கள்’ என்று கூறினேன்.
மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் – சிங்கப்பூர் பிரஜை. அவா் 15 பில்லியன் ரூபாவினை, அவருடைய மருமகனுக்கு பிணை வழங்கி, மோசடி செய்துள்ளாா். அவரை நியமித்த ஜனதிபதி பதவியிலிருந்து நீங்க வேண்டும். அதுதான் சட்டம்.
ஆனால், மத்திய வங்கி மற்றும் முக்கிய நிறுவனங்கள், பிரதம மந்திரியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. பிரதம மந்திரி – ஒருபோதும் சட்டத்திற்கு முரணாக, நிதி மோசடி பொலிஸ் விசாரணைப் பிரிவொன்றினை ஏற்படுத்த முடியாது. இதனை ஏற்படுத்திய முறைமை பற்றி, நாம் உயா் நீதிமன்றம் சென்றால், பொலிஸ் மா அதிபரும், பிரதம மந்திரி ரணிலும்தான் பதில் சொல்ல வேண்டும்.
நாளுக்கு நாள், 300க்கும் அதிகமான அரச அதிகாரிகள், நிதி மோசடி பொலிஸ் விசாரணைப் பிரிவினரால், விசாரிக்கப்படுகின்றனர். பிரித்தானிய சட்டத்தின் படி, நுாற்றாண்டுகளாக பொலிஸ் மற்றும் சி.ஜ.டி விசாரண மற்றும் நீதிமன்ற முறைமை இலங்கையில் இருக்கும்போது, பொலிஸ் நிதி மோசடி விசரணைப் பிரிவினை, ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்த முடியாது. அதனை பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியால் மட்டுமே, சட்டத்தினை ஏற்படுத்தி அமைக்க முடியும்.
இந்த நாட்டில், முன்னைய ஜனாதிபதி முன்னெடுத்த 59 வெளிநாட்டுத் திட்டங்களை, தற்போதைய பிரதமா் நிறுத்தியுள்ளாா். மேற்படி திட்டங்கள் சர்வதேச ஒப்பந்தங்களினூடாகச் செய்யப்பட்டவை. இதனை நிறுத்தியமைக்கு, சர்வதேச வழக்குச் செய்தால், நஷ்ட ஈட்டினை ரணில்தான் வழங்க வேண்டி ஏற்படும்.
உலக நாடுகளில் ஆட்சியிலிருந்து தலைவா்கள் மற்றும் கட்சிகள் மாறினாலும், அந்த நாட்டில் நடைமுறையிலுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் நிறுத்தாமல் முன்னெடுக்கப்படுவதே வழமையாகும். மேற்படி திட்டங்கள் நிறுத்தப்பட்டமையினால், இலங்கையிலும், உலகளாவிய ரீதியிலுமுள்ள வியாபாரிகள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் அதனோடு தொடர்புபட்ட தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவாா்கள்.
மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராகத் தொடுக்கப்படும் வழக்குகளில், மஹிந்தவுக்குச் சார்பாக ஆஜராகி – நான் வாதாடினால், அவை தோல்வியுறும். அதனை நான் செய்வேன். இந்த நாட்டில், சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களைக்கொண்ட கட்சி, எவ்வாறு அரசாங்கத்தினை அமைக்க முடியும்? இதுதான், ஜனாதிபதி மைத்திரி செய்த – முதல் தவறாகும்.