தாஜுத்தீன் கொலை; குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று ஆஜராகுமாறு சிராந்திக்கு அழைப்பு
றகர் வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பான விசாரணைகளின் பொருட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷவை, இன்று செய்வாய்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தாஜுதீனின் கொலை சந்தேக நபர்கள், சிராந்தி ராஜபக்ஷவின் மெய் பாதுகாவலர் வசமிருந்த டிபென்டர் வாகனத்தை உபயோகித்ததாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
மேற்படி டிபென்டர் வாகனத்தை, சிராந்தி ராஜபக்ஷவின் சிரிலிய அமைப்புக்கு, சுனாமி பணிகளுக்காக செஞ்சிலுவைச் சங்கம் அன்பளிப்பாக வழங்கியிருந்தது. ஆயினும், குறித்த வாகனம் மோட்டார் திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை.
மேலும், வெள்ளை நிறத்திலான குறித்த டிபென்டர் வாகனத்தை, தாஜுத்தீன் கொலை செய்யப்பட்ட பின்னர் கறுப்பு நிறமாக மாற்றியுள்ளனர்.
தாஜுதீன் கொலை தொடர்பாக விசாரணை செய்யும் பொருட்டு, சிராந்தியின் இரண்டாவது புதல்வரான யோசித ராஜபக்ஷவுக்கும், நாளை புதன்கிழமை ஆஜராகுமாறு குற்றப் புலனாய்வு பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.
இன்று நடைபெறவுள்ள விசாரணைக்காக ஏற்கனவே சிராந்தி ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், குறித்த தினம் அவர் சமூகமளிக்கவில்லை. அதேபோன்று, இன்றும் அவர் சமூகமளிக்கத் தவறினால், அவருக்கு எதிராக நீதிமன்ற அழைப்பாணை பெறப்படும் என்று, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.