ரவியின் அலுவலர்கள் தொடர்ந்தும் அமைச்சுக்குள்; பதவியை பொறுப்பேற்க மாரப்பன தயக்கம்

🕔 August 15, 2017

வெளி விவகார அமைச்சராக நியமிக்கப்படவுள்ள திலக் மாரப்பன, அந்தப் பதவியை ஏற்பதற்கு தயக்கம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெளி விவகார அமைச்சர் பதவியை ரவி கருணாநாயக்க ராஜிநாமா செய்துள்ள போதும், அவர் நியமித்த தனிப்பட்ட அலுவலர்கள், தற்போதும் அந்த அமைச்சில் இருப்பதனாலேயே, அமைச்சுப் பதவியை பொறுப்பேற்பதற்கு திலக் மாரப்பன தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

மேலும், அமைச்சின் வாகனங்களையும், ஏனைய வசதிகளையும் ரவியின்  தனிப்பட்ட அலுவலர்கள்  இன்னும் அனுபவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, தனது தனிப்பட்ட அலுவலர்களை தொடர்ந்தும் அமைச்சில் வைத்திருக்க வேண்டும் எனும் நிபந்தனையை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முன்வைத்த நிலையே, ரவி கருணாநாயக்க பதவியை ராஜிநாமா செய்தார் என்று, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனது தனிப்பட்ட அலுவலர்களை அமைச்சிலிருந்து நிறுத்துவதிலும், தனக்கான அமைச்சு வாகனங்களை கையளிப்பதிலும் எந்தவித அர்த்தங்களும் கிடையாது என்று, அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியதாகவும் அறியமுடிகிறது.

இவ்வாறான சூழ்நிலையில், வெளி விவகார அமைச்சர் பதவியை பொறுப்பேற்பதற்கு திலக் மாரப்பன தயங்குவதாக அறிய முடிகிறது.

வெளி விவகார அமைச்சினை தனக்கு வழங்குவதாயின், அதனை முறையாக வழங்க வேண்டுமெனவும், இடைக்காலத்துக்கான தற்காலிக ஓர் அமைச்சராக தன்னை நியமிக்கக் கூடாது என்றும், அரசாங்க தலைவர்களிடம் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்