மு.காங்கிரசின் மாவட்ட குழுக் கூட்டத்தில் அடிதடி; கட்சித் தலைவருக்கு முன்னால் கதிரை வீசித் தாக்குதல்

🕔 August 12, 2017

– முன்ஸிப் அஹமட் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டம், கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் தலைமையில் இன்று சனிக்கிழமை நிந்தவூரில் நடைபெற்ற போது, அடிதடி இடம்பெற்றமையினால், அங்கு  கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. இதனால், மு.கா. தலைவர் ஹக்கீம் பாரிய அவமானத்துக்குள்ளானார்.

முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினரான ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஹமீட் என்பவரை, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீருடைய பிரத்தியோக பணியாளர்கள் சிலர் – தாக்குவதற்கு முயற்சித்தபோது, ஒலுவில் பிரதேசத்திலிருந்து வருகை தந்தவர்கள், அமைச்சர் நசீருடைய பிரத்தியேகப் பணியாளர்களை தாக்கினர். இதனால் அங்கு கைகலப்பு உருவானது.

மேலும், மு.கா. தலைவர் முன்னிலையே ஒரு தரப்பினரை நோக்கி மற்றைய தரப்பினர், ஆளாளுக்கு கதிரைகளைத் தூக்கி எறிந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால், மு.கா. தலைவர் பெரும் அவமானத்துக்குள்ளான நிலையில் கூனிக் குறுகிக் காணப்பட்டார்.

அடிபிடி ஏற்படுவதற்கு முன்னதாக, மேற்படி மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அங்கு பேசுவதற்கு எழுந்த ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஹமீட்; “அம்பாறை மாவட்டத்தின் செயற்குழுக் கூட்டம் இதற்கு முன்னர் கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக மருதமுனையில் நடைபெற்றது. அதற்குப் பின்னர் கிழக்கு மாகாண சபை கலையவுள்ள நிலையில் இன்றைய தினம் நடைபெறுகிறது. அதாவது, தேர்தல்களைக் குறி வைத்து மட்டுமே நீங்கள் மாவட்ட செயற்குழு கூட்டங்களை நடத்துகின்றீர்கள்” என்று தனது ஆதங்கத்தினைத் தெரிவித்தார்.

இதன் பின்னர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீர் பேசும் போது; ஒலுவில் பிரதேசத்துக்கு – தான் பல சேவைகளை ஆற்றியுள்ளதாகவும், தனது இணைப்பாளராக ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை நியமித்து, அவருக்கு வாகன வசதிகளை செய்து கொடுத்திருப்பதாகவும் கூறினார்.

இதற்கு பதிலளிப்பதற்காக எழுந்த ஒலுவில் ஹமீட்; “ஒலுவில் பிரதேசத்துக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பாளர் ஒருவரை நியமிப்பதாயின், மு.காங்கிரசின் ஒலுவில் பிரதேச மத்திய குழுவிடம், அமைச்சர் நசீர் பேசிக் கதைத்து, அவர்களின் அபிப்பிராயப்படி அந்த நியமனத்தை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அப்படி நடைபெறவில்லை. சுகாதார அமைச்சர் நசீர் தனக்கு வேண்டிய ஒருவருக்கு அந்தப் பதவியை வழங்கி விட்டு, ஒலுவில் பிரதேசத்துக்கு வழங்கியதாக கூறுகின்றமையை ஏற்றுக் கொள்ள முடியாது” என்றார்.

இதனால், சுகாதார அமைச்சர் நசீருக்கும் ஹமீட்டுக்கும் இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதன்போது; “முஸ்லிம் காங்கிரசின் எதிராளிகளுடன் ஹமீட் நட்புறவு வைத்துள்ளார்” என்று, சுகாதார அமைச்சர் நசீர் குற்றம் சாட்டியதோடு, கட்சித் தலைவர் முன்னிலையில் விரல் நீட்டி ஹமீட் பேசியமை – தவறு என்றும் கூறினார்.

இவ்வாறு வாக்கு வாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேக பணியாளர்கள் சிலர், ஒலுவில் ஹமீட்டை தாக்குவதற்கு முயற்சித்தனர். அப்போது, ஹமீட்டின் பிரதேசத்தைச் சேர்ந்த நண்பர்கள் அதனைத் தடுப்பதற்கு முயற்சிக்க, அங்கு அடிபிடி ஏற்பட்டதோடு, ஒருவரை நோக்கி ஒருவர் கதிரைகளை வீசியும் தாக்கினார்கள்.

இந்தச் சண்டை சில நிமிடங்கள் வரை நீடித்தது.

அங்கு சண்டையிட்டவர்கள் கட்சித் தலைவர் அங்கு இருக்கின்றார் என்பதை கணக்கில் எடுக்காமல், தலைவரை ஒரு பொருட்டாக மதிக்காமல் இவ்வாறு நடந்து கொண்டமையானது, ரஊப் ஹக்கீமுக்கு பாரிய அவமானத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பில் புதிது செய்தித் தளத்துக்கு அங்கிருந்த ஒருவர் கூறுகையில்; இந்த சம்பவத்தினால் மு.கா. தலைவர் கூனிக் குறுகிப் போனதாகத் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்