மாகாண சபைகளை முன் கூட்டி கலைத்து விட்டு, ஒரே தினத்தில் தேர்தல்களை நடத்துங்கள்: பெப்ரல் வேண்டுகோள்

🕔 August 4, 2017

னைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல்களை நடத்தும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு யாரும் எதிர்ப்பில்லை எனத் தெரிவித்துள்ள பெப்ரல் அமைப்பு, ஆனால், அந்த திட்டத்தின் ஊடாக தேர்தல்களை பிற்போடுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், அதனை தாம் எதிர்ப்பதாகவும் கூறியுள்ளது.

நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி உரையாற்றும் போதே, இதனைத் தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை ஒரே நாளில் நடத்துவது எனும் திட்டத்துக்கு தேர்தல் கண்காணிப்பு குழுக்களும், சிவில் அமைப்புக்களும் ஆதரவாகும். ஆனால், அரசாங்கத்தின் நோக்கம் அதுவல்ல என்றும் ரோஹன ஹெட்டியாராச்சி கூறினார்.

தேர்தல்களைப் பிற்போடுவதற்கு எதிராக, தாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக குறிப்பிட்ட அவர்; இவ்விடயம் தொடர்பாக தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் தமது சட்ட ஆலோசகர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மாகாண சபைகளை முன்கூட்டி கலைப்பதன் மூலம், தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துமாறு அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்த பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர்; ஒக்டோபர் மாதம் பதவிக் காலம் நிறைவடையும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களைப் பிற்போட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்