அதாஉல்லா, முஸ்லிம் கூட்டணி ஏற்பாட்டாளர்கள் சந்திப்பு; இணைந்து செயற்பட இணக்கம்

🕔 August 4, 2017

– முன்ஸிப் அஹமட் –

முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கும், முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர்களுக்குமிடையில் நேற்று வியாழக்கிழமை இரவு கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர்கள் சார்பில் முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத், முன்னாள் ராஜாங்க அமைச்சர் எம்.ரி. ஹசனலி மற்றும் தொழிலதிபர் நஸார் ஹாஜி ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்காக, முஸ்லிம் கூட்டமைப்பில் இணைந்து பணியாற்றுவதற்கு, இதன்போது தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா சம்மதம் தெரிவித்தார் என்று, சந்திப்பில் கலந்து கொண்ட நஸார் ஹாஜி கூறினார்.

அதேவேளை, தேர்தல்களை எதிர்கொள்ளும் போது, எவ்வாறு செயற்படுவது என, அந்தந்த வேளைகளில் முடிவுகளை மேற்கொள்வதெனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாகவும் நஸார் ஹாஜி குறிப்பிட்டார்.

நீண்ட நேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, தேர்தல் முறை மாற்றம் மற்றும் அதனால் முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள் குறித்தும், அதிகம் பேசப்பட்டதாகவும் அவர் விபரித்தார்.

அரசியல் ரீதியாக முஸ்லிம் கட்சிகளையும், முஸ்லிம் அரசியல்வாதிகளையும் ஒன்றிணைத்து முஸ்லிம் அரசியல் கூட்டணியொன்றினை உருவாக்குவதற்காக, முஸ்லிம் காங்கிரசிலிருந்து விலகிச் செயற்படும் அணியின் முக்கியஸ்தர்களான பசீர் சேகுதாவூத், ஹசனலி மற்றும் நஸார் ஹாஜி உள்ளிட்டோர் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.

இதன்பொருட்டு, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பலருடன், முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாகப் பேசி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாகவே, நேற்றைய சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில், “முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவுடன் ஏற்கனவே இடம்பெற்ற சந்திப்புகளை விடவும், நேற்று இரவு இடம்பெற்ற சந்திப்பு மிகவும் நம்பிக்கையளிக்கும் வகையில் அமைந்திருந்தது” என்றும், நஸார் ஹாஜி தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்