வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின், கட்சியிலிருந்து நீக்கப்படவுள்ளார்: NFGG பிரதித் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர்
வடக்கு மாகாண சபை உறுப்பினரும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) உறுப்பினருமான அய்யூப் அஸ்மின், கட்சியிலிருந்து நீக்கப்படவுள்ளார் என்று, அந்தக் கட்சியின் பிரதித் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர் தெரிவித்துள்ளார்.
தனது பேஸ்புக் பக்கத்தினூடாக வெளியிட்டுள்ள அறிக்கையொன்றினூடாகவே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு இணங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய போனஸ் ஆசனமொன்று, நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு வழங்கப்பட்டது. அந்த ஆசனத்துக்காக, அய்யூப் அஸ்மின் என்பவரை, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நியமித்தது.
அய்யூப் அஸ்மினை கட்சியிலிருந்து விலக்குகின்றமை தொடர்பில், பிரதித் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர் மேலும் குறிப்பிடுகையில்;
அய்யூப் அஸ்மினை பலமுறை விசாரணைக்கு அழைத்தும், கட்சியின் அழைப்பை மதிக்காமல் தொடந்தும் புறக்கணித்துக் கொண்டே வருகிறார்.
எனவே, நாளை வெள்ளிக்கிழமை மாலை கூடவுள்ள NFGG யின் தலைமைத்துவ சபை, இது தொடர்பான இறுதி முடிவை எடுக்கவுள்ளது.
அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, தான்தோன்றித் தனமாக தொடர்ந்தும் செயற்பட்டும் கருத்துக் கூறியும் வருகிறார். முறைப்படி விசாரணை செய்ய வேண்டும் என்பதனாலேயே இவ்விடயம் தாமதமாகி வருகிறது. ஆனால், இதனை- அதாவது ஜனநாயகபூர்வமான எமது அணுகுமுறையை- அவர் கட்சியின் பலவீனமாக காட்ட முனைகிறார்.
எதற்கும் ஒரு எல்லை உள்ளது. அவரது விவகாரம் பேசித் தீர்க்கும் எல்லையைக் கடந்து விட்டது.
இப்போது கட்சிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமென்பதற்காக, வேண்டுமென்றே மக்களது உணர்வுகளோடு விளையாடும் வண்ணம் கருத்துத் தெரிவித்து வருகிறார்.
அதுவும் NFGG யின் முக்கிய ஆதரவுத் தளமான காத்தான்குடி மக்களைத் தூண்டும் வண்ணம் கருத்துத் தெரிவித்துள்ளார். அவரது கருத்து சிறுபிள்ளைத் தனமானது. அதனை NFGG ஒருபோதும் சரி காணவில்லை. காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையை புலிகள்தான் செய்தார்கள் என்பது பகிரங்க உண்மை. அது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டு விட்டது. இதை யாரும் புதிதாக நிறுவ வேண்ணடியதில்லை.
அவருக்கு போதிய அவகாசம் கொடுத்தாகி விட்டது. அவர் யாருக்கு விசுவாசமாக நடந்து கொள்கிறார் என்பதும் தெளிவாகி விட்டது. இதன் காரணமாக அவர் NFGG கட்சியிலிருந்து நீக்கப்பட உள்ளார். அதனை விரைவில் எதிர்பாருங்கள்.