பிணை முறி விவகாரம்; அமைச்சர் ரவி, அர்ஜுன் அலோசியஸ், ஒரே நாட்களில் சிங்கப்பூருக்கு 13 தடவை பயணம்: விசாரணையில் அம்பலம்
அமைச்சர் ரவிகருணாநாயக்க மற்றும் மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடைய பேர்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அர்ஜுன் அலோசியஸ் ஆகிய இருவரும் ஒரே நாட்களில் சிங்கப்பூருக்கு 13 தடவை பயணித்துள்ளனர் என்று, சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று புதன்கிழமை தெரிவித்தது.
பிணை முறிகள் விநியோகத்தில் இடம்பெற்றுள்ள மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று வாக்கு மூலம் வழங்குவதற்காக ஆஜரானார். இதன்போதே, சட்ட மா அதிபர் திணைக்களம் மேற்படி தகவலை வெளியிட்டது.
அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோரின் வெளிநாட்டு பயண விபரங்களை ஆராய்ந்த பின்னர், இந்தத் தகவலை சட்ட மா அதிபர் திணைக்களம் வெளியிட்டது.
தேசிய அரசாங்கத்தில் நிதியமைச்சராக ரவி கருணாநாயக்க பதவி வகித்தபோது, மேற்படி சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் இடம்பெற்றது.
மேற்படி இருவரும் ஒரே இடத்துக்கு, ஒரே நாட்களில் 13 தடவை பயணம் செய்துள்ளனர் என்று தெரிவித்த சட்ட மா அதிபர் திணைக்களம், இது அசாதாரணமானதொரு விடயமெனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த பயணத்தின் போது அர்ஜுன் அலோசியஸை சந்தித்தீர்களா என, அமைச்சர் ரவியிடம் கேட்கப்பட்ட போது, அது தொடர்பில் தனக்கு நினைவில்லை எனக் கூறினார்.
எவ்வாறாயினும், சிங்கப்பூரில் அர்ஜுன் அலோசியஸை தான் சந்தித்ததாக ஒப்புக் கொண்ட அமைச்சர் கருணாநாயக்க, அவை முன் கூட்டிய திட்டமிட்ட சந்திப்புகள் அல்ல என்று தெரிவித்தார்.