இறக்காமம் வைத்தியசாலைக்கு நோயாளர் விடுதி விரைவில்; பொறியியலாளர் மன்சூரிடம் அமைச்சர் திஸாநாயக்க உறுதி

🕔 August 2, 2017

– முன்ஸிப் அஹமட் –

றக்காமம் வைத்தியசாலைக்கு இரண்டு மாடிகளைக் கொண்ட நோயாளர் விடுதி ஒன்றினை நிர்மாணிப்பதற்குரிய நிதியினை விரைவில் ஒதுக்கித் தருவதாக, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூரிடம் சமூக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க உறுதியளித்தார்.

அமைச்சர் திஸாநாயக்கவை அவரின் அமைச்சில் வைத்து பொறியியலாளர் மன்சூர், இன்று புதன்கிழமை சந்தித்துப் பேசியபோதே, இந்த உத்தரவாதத்தினை அமைச்சர் வழங்கினார்.

இறக்காமம் பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன்னர் கந்தூரி உணவினை உட்கொண்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள், சுகயீனமுற்று வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது இறக்காமத்துக்கு விஜயம் செய்த அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க, அப்பிரதேச வைத்தியசாலைக்கு இரண்டு மாடிகளைக் கொண்ட நோயாளர் விடுதியொன்றினை நிர்மாணித்துத் தருவதாக, பொதுமக்கள் முன்னிலையில் வாக்குறுதி வழங்கியிருந்தார்.

இதனை நினைவுபடுத்திய பொறியியலாளர் மன்சூர்; இரண்டு மாடிகளைக் கொண்ட நோயாளர் விடுதியொன்றினை நிர்மாணிப்பதற்கான செலவு மதிப்பீட்டினை கல்முனைப் பிராந்திய வைத்திய சேவை பணிப்பாளர் காரியாலயமும், கட்டட திணைக்களத்தின் பிரதம பொறியியலாளரும் இணைந்து மேற்கொண்டதாக அமைச்சரிடம் கூறினார்.

இதற்கிணங்க, குறித்த கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக 45 மில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும் அமைச்சரிடம் பொறியியலாளர் மன்சூர் சுட்டிக்காட்டினார்.

இவற்றினை செவிமடுத்த அமைச்சர்; இறக்காமம் வைத்தியசாலைக்கு குறித்த நோயாளர் விடுதியினை நிர்மாணிப்பதற்கான நிதியினை விரைவில் வழங்குவதாக உறுதியளித்தார்.

இறக்காமம் பிரதேச மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில், அங்குள்ள வைத்தியசாலையில் கட்டடங்களும், ஏனைய வழங்களும் இல்லை என்பது, பெரும் குறையாக உள்ளது.

இக்குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் பொருட்டு, வைத்தியசாலைக்கான வளங்களைப் பெற்றுக் கொள்வதற்காக, அப்பிரதேசத்தின் ஒழுங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பொறியியலாளர் மன்சூர், பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய சந்திப்பின் போது, இது தொடர்பான கோரிக்கைக் கடிதமொன்றினையும், அமைச்சரிடம் மன்சூர் கையளித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்