கிழக்கு மாகாண ஆளுநருடன், முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர்கள் சந்திப்பு

🕔 August 2, 2017

– மப்றூக் –

திர்வரும் ஒக்டோபர் மாதம் பதவிக்காலம் வறிதாகவுள்ள, கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளின் மாகாண ஆளுநர்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைத்துப் பேசுவார் என்றும், அதன்போதே குறித்த மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் குறித்து ஜனாதிபதி கருத்து வெளியிடுவார் எனவும், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தம்மிடம் கூறியதாக, மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும் தூய முஸ்லிம் காங்கிரசின் பிரமுகரும், முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர்களில் ஒருவருமான பசீர் சேகுதாவூத் ‘புதிது’ செய்தித்தளத்திடம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக அண்மையில் பதவியேற்ற ரோஹித போகொல்லாகமவை அவரின் கொழும்பு இல்லத்தில், தூய முஸ்லிம் காங்கிரசின் பிரமுகர்களும், முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர்களுமான எம்.ரி. ஹசனலி, பசீர் சேகுதாவூத் மற்றும் நஸார் ஹாஜி ஆகியோர் இன்று புதன்கிழமை சந்தித்து தமது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, சமகால அரசியல் குறித்தும் கலந்துரையாடினர்.

இதன்போதே, மேற்படி விடயத்தை ஆளுநர் போகொல்லாகம தெரிவித்ததாக, பசீர் சேகுதாவூத் கூறினார்.

இதேவேளை, அரசியலில் சிரேஷ்டத்துவம் மிக்க, உங்களைப் போன்றவர்களின் பங்களிப்பு தற்போதைய அரசியலுக்குத் தேவையாக உள்ளது என்றும், ஹசனலி மற்றும் பசீர் உள்ளிட்டவர்களிடம் ஆளுநர் போகொல்லாம தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் பசீர் சேகுதாவூத் விபரிக்கையில்;

“கிழக்கு மாகாணத்தின் அரசியல் குறித்து ஆளுநர் போகொல்லாகம மிகப் பரந்தளவில் தெரிந்து வைத்துள்ளார். அவருடன் நாம் பல்வேறு விடயங்கள் குறித்தும் பேசினோம். கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளின் ஆட்சிக்காலங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடைகின்றன. அந்த மாகாணங்களின் ஆளுநர்களை ஜனாதிபதி அழைத்துப் பேசுவார் என்றும், அதன்போதே அந்த மாகாணங்களுக்குரிய தேர்தல்கள் குறித்து ஜனாதிபதி கருத்து வெளியிடுவார் எனவும், ஆளுநர் போகொல்லாகம எம்மிடம் கூறினார்” என்றார்.

இதேவேளை, ஆளுநருடனான சந்திப்பு தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், நிறைவானதொரு சந்திப்பாக அமைந்தாகவும், இதில் கலந்து கொண்ட முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான நாஸார் ஹாஜி கூறினார்.

எவ்வாறாயினும், ஆளுநருடன் பேசப்பட்ட சில விடயங்களை ஊடகங்களுக்கு வெளியிட முடியாதென்றும் நஸார் ஹாஜியார் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்