கிரிக்கட் ரசிகர்கள் மோதல் விவகாரத்தில், அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனரென, முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; கெத்தாராம ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்கில், கடந்த ஞாயிற்றுக்கிழமையிரவு இடம்பெற்ற நிகழ்வும், அதற்கு பின்னரான சம்பவங்களும் கண்டிக்கத்தக்கவையாகும்.
பார்வையாளர்கள் இருவருக்கிடையிலான முறுகலே, பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. பார்த்திருப்பாளர் பகுதியில் இருந்த தரப்பினராலேயே, பள்ளிவாசலுக்கு, கல் எறியப்பட்டுள்ளன. அத்துடன், மைதானத்திற்கு வெளியில் இருந்தவர்களால், விளையாட்டரங்கை நோக்கி கற்கள் எறியப்பட்டுள்ளன. இச் செயல்களை பொலிஸாரால் தடுத்துநிறுத்த முடியவில்லை.
ஆனால், இந்த சம்பவங்களுடன் தொடர்பற்ற அப்பாவி இளைஞர்கள் இருவரை, மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் எந்தவிதமான தகராறிலும் ஈடுபடாது, கிரிக்கட்போட்டியை பார்க்கச் சென்றவர்களாவர். போட்டியை பார்த்து விட்டு, வெளியில் வரும்போது, அநியாயமாக இவர்கள் கைதாகியுள்ளனர்.
எனவே, இது விடயத்தில் சரியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, கைது செய்பட்டுள்ள அப்பாவி இளைஞர்களை, உடனடியாக விடுவிக்க வேண்டுமென, அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.