ரஊப் ஹக்கீம்: நேர்முகம்

🕔 July 23, 2015

Interview - Hakeem - 02

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் – அமைச்சர் ரஊப் ஹக்கீம், சிங்கள இலத்திரனியல் ஊடகமொன்றிற்கு, நேற்று புதன்கிழமை நேர்காணலொன்றினை வழங்கியிருந்தார். அதனை தமிழில் வழங்குகின்றோம்.

கேள்வி: சமயலறையைப் பற்றி, நீங்கள் இங்கு வரும் பொழுது உரையாடிக் கொண்டிருந்தோம். நீங்களும், அண்மையில் நாடாளுமன்றத்திலுள்ள ‘குசினி கூட்டத்தினர்’ பற்றி கூறினீர்கள். நாடாளுமன்றத்தில் அந்தளவுக்கு – பெண்கள் பிரதிநிதித்துவம் இல்லையே. நீங்கள் குறிப்பிட்ட அந்த ‘குசினிக் கூட்டத்தினர்’ யார்?

பதில்: அமைச்சரவையில் பேசப்படுபவற்றை வெளியில் கதைப்பது முறையல்ல. ஏனென்றால், அமைச்சுப் பொறுப்பை பேண வேண்டிய அவசியமிருக்கிறது. பாராளுமன்றத்தில் 20ஆவது அரசியல் திருத்தத்தைப் பொறுத்தவரை, அமைச்சர்கள் சிலருக்கும் எங்களுக்குமிடையில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. அவர்களைப் பற்றித்தான் சூசகமாக குறிப்பிட்டேன். அவர்கள் இப்பொழுது எங்களது கூட்டில் இணைந்திருக்கின்றார்கள். சிறுபான்மையினக் கட்சியொன்றின் தலைவர் என்ற முறையில், சிறுகட்சிகளுடன் சேர்த்து பெரிய கட்சிகளுடன் அந்த விடயத்தில் நான் முரண்பட நேர்ந்தது தெரிந்த விஷயம். 20ஆவது திருத்தம் நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில், முரண்பாடுகளுக்கு மத்தியில் இறுதியில் நாடாளுமன்றமே கலைக்கப்பட்டு விட்டது.

கேள்வி: அமைச்சரவையில் சம்பிக்கவோடு முரண்பட்ட நிலையில், பதவிக்கு ஆசைப்பட்டு, மீண்டும் நீங்கள் எல்லோரும் தேர்தலில் போட்டியிடுகின்றீர்களே.

பதில்: எங்களுக்கிடையில் தனித்தனி விடயங்களைப் பொறுத்தவரையில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. நல்லாட்சி போன்ற அம்சங்களில் காட்டும் ஈடுபாட்டில் நாங்கள் எல்லோரும் ஒரே இலக்கை நோக்கியே பயணிக்கின்றோம். ஊழல், மோசடி போன்ற விவகாரங்களில் நாங்கள் ஒருமித்த நிலைப்பாட்டிலேயே இருந்தோம். தனித்தனி விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால், பொதுவான குறிக்கோள் என்னவென்பதில் நாங்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். இந்த விடயத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் ஒரே விதமாகவே சிந்திக்கின்றார்கள்.

கேள்வி: 20ஆவது திருத்திற்கு விரோதமாக இருந்த துஷ்டன் என்று, அமைச்சர் சம்பிக்க ரணவக்க உங்களை பற்றி ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியிருந்தார். அப்படியான துஷ்டனோடுதான் தாம் மோதுவதாகவும் அவர் கூறியிருந்தார். அப்படியானவர்களளுடனா நீங்கள் இப்பொழுது சேர்ந்திருக்கின்றீர்கள்?

பதில்: தொகுதிவாரி தேர்தல் முறை மற்றும் விகிதாசாரத் தேர்தல் முறை என்பவற்றை உள்ளடக்கிய கலப்புத் தேர்தல் முறைபற்றி, நாங்கள் இணக்கப்பாட்டுன் இருந்தோம். ஆனால், அறிமுகப்படுத்த உத்தேசிக்கப்பட்டிருந்த தேர்தல் முறையில், வாக்காளர் ஒருவர் இரட்டை வாக்குச் சீட்டுகளை பயன்படுத்தும் விடயத்தில்தான் முரண்பாடு தோன்றியது. இரட்டை வாக்கு விடயத்தை – இலங்கை சமசமாஜக் கட்சி, கொமியூனிஸ்ட் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி என்பனவும் எங்களிடம் சேர்ந்து ஆதரித்தன.

கேள்வி: 20ஆவது திருத்தம் இவ்வாறிருக்க, இந்தக் கூட்டுக்கு அவர்கள் உங்களோடு உடன்பட்டனரா? நீங்கள் அவர்களுக்கு உடன்பட்டீர்களா? அல்லது எந்த இணக்கப்பாடுமின்றி இந்த தேர்தலுக்காக மட்டும் இணைந்தீர்களா?

பதில்: சிறிய காரணங்கள் தொடர்பிலேயே எங்களுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் இருந்தன. சில திருத்தங்களை நாங்கள் ஏற்றுக் கொள்ள மறுத்ததுதான் – கருத்து வேறுபாட்டிற்கு காரணமாக அமைந்தது.

கேள்வி: நீங்கள் அதிகாரமிருக்கும் பக்கத்திற்கு தாவுகின்ற சந்தர்ப்பவாத அரசியல் வாதியென, பலர் கூறுகின்றனர். இன்றைய ஆங்கில பத்திரிகையொன்றில் கூட அது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இது பற்றி நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?

பதில்: அவ்வாறு கூறப்பட்ட போதிலும் யதார்த்தத்தை பார்க்க வேண்டும். நான் எப்பொழுதும் ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சியில் அமர்த்த உதவினேனே தவிர, அக்கட்சியை வீழ்த்துவதற்கு எத்தனித்தவனல்ல. எனக்கு அநீதி இழைக்கப்படும் பொழுது, நான் அரசாங்கத்தில் இருந்து அகன்றிருக்கின்றேன். நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் பொழுது, நான் விலகியிருக்கின்றேன். அவ்வாறு அமைச்சர் பதவியில் இருந்து விலகிய சந்தர்ப்பங்கள் இரண்டுள்ளன. ஒரு முறை, நான் அரசாங்கத்தின் அமைச்சர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டேன். அதைத் தொடர்ந்து, மக்கள் விடுதலைமுன்னணியிடம் சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கு ஏற்பட்டது.

எமது உறுப்பினர்களை காவு கொள்ள முயற்சித்ததாலேயே, கட்சியை காப்பாற்றுவதற்காக, மஹிந்த ராஜபக்ஷவோடு – நாங்கள் இணைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 19ஆவது திருத்தத்தினுடாக முன்வைத்துள்ள சரத்துகளைப் பொறுத்தவரை, உறுப்பினர்களை காவு கொள்ளும் நடவடிக்கைக்கான வழிவகைகள் வெகுவாக குறைக்கப்பட்டு விட்டன.

கேள்வி: இதற்காக எவ்வளவு பணம் பரிமாறப்படுகிறது? இந்தக் கலாசாரம் மாறாதா?

பதில்: அந்த கலாசாரம் மாற வேண்டும். 19ஆவது திருத்தத்தின் மூலம், நிறைவேற்று அதிகாரம் வெகுவாக குறைக்கப்பட்டுவள்ளது. முதன் முறையாக மிதமிஞ்சிய அதிகாரங்களை குறைப்பதற்கு முன்வந்தமைக்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்க நாம் நன்றி செலுத்த வேண்டும். அதனால், அவர் என்றும் எனது பாராட்டுக்குரியவராகத் திகழ்கின்றார்.

Comments