மஹிந்தவுடன் பேசி, சுதந்திரக் கட்சியை காப்பாற்றுங்கள்: மைத்திரியிடம் வலியுறுத்தல்

🕔 July 30, 2017

னாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து பணியாற்றும் சாத்தியம் தொடர்பில், இருவரும் சந்தித்து பேச வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

சுதந்திரக் கட்சியின் நிருவாகக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற போது, ஜனாதிபதி மைத்திரியிடம் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

சுதந்திரக் கட்சி அங்கத்தவரும் அமைச்சருமான ஜோன் செனவிரட்ன, ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்; இந்த அரசாங்கத்தில் சுதந்திரக்கட்சி தொடர்ந்தும் இருப்பதில் பாரிய இடையூறுகள் உள்ளன என்று கூறியுள்ளார்.

சுதந்திரக் கட்சி உடைவதைத் தடுக்க வேண்டுமாயின், மஹிந்த ராஜபக்ஷவிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று, ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் வலியுறுத்தியதாகவும் செனவிரட்ன குறிப்பிட்டார்.

இதேவேளை, அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சி எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் இணைந்திருக்க வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியதாகவும், ஆனால், சுதந்திரக் கட்சியினருக்கு இதில் விருப்பமில்லை என்றும் அமைச்சர் செனவிரட்ன தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு நடத்தாமல் விட்டால், சுதந்திரக்கட்சி உடைவதைத் தடுக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய அரசாங்கத்தை அமைக்கும் பொருட்டு, ஐ.தே.கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம், ஓகஸ்ட் மாதத்துடன் முடிவுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments