நவாஸ் ஷெரீபை காட்டிக் கொடுத்த ‘கலிப்ரி’ எழுத்துரு; பாகிஸ்தான் பிரதமர் சிக்கிய கதை

🕔 July 29, 2017

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது பதவியை ராஜிநாமா செய்தாரல்லவா? ஏன் செய்தார்? உடனே, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதால் என்பீர்கள். தங்கள் நாட்டுக்குத் தெரியாமல் மோசடியாக வெளிநாடுகளில் சொத்துக் குவித்த நபர்கள் மற்றும் நிறுவனங்களின் தகவல்கள், பனாமா பேர்பர்ஸ் எனும் பெயரில், சில காலங்களுக்கு முன்னர் வெளியாகி – உலகை கதிகலங்க வைத்தது.

பனாமா பேர்பர்ஸ் ஆவணத்தில் நவாஸ் ஷெரீபின் பெயரும் இருந்தது. ஆனால், அவரின் பெயர் மட்டும் இருக்கவில்லை. 03 லட்சத்து 60 ஆயிரம் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள் இருந்தன. பாகிஸ்தானுக்கு மிக அருகிலுள்ள இந்தியாவின் பிரபல நடிகர் அமிதாபச்சன், அவருடைய மகன் அபிஷேக்பச்சன் மற்றும் ஐஸ்வர்யாராய் ஆகியோரின் பெயர்களும் பனாமா பேர்பர்ஸ் ஆவணங்களில் இருந்தன. இலங்கையர்களின் பெயர்களும் அவற்றில் உள்ளடக்கம்.

இவர்களெல்லோரும் சிக்காமல், நவாஸ் ஷெரீப் மட்டும் எப்படி இந்த விவகாரத்தில் சிக்கினார் என்கிற கேள்வி, உங்களுக்குள் எழவில்லையா?

சொன்னால் நம்ப மாட்டீர்கள். இந்த விவகாரத்தில், நவாஸ் ஷெரீப் சிக்கியது, கணினியில் பயன்படுத்தும் ஆங்கில எழுத்துரு (Font) ஒன்றினால்தான் என்றால், திகைத்துத்தான் போவீர்கள். ஆனால், அதுதான் உண்மையாகும்.

ஒரு எழுத்துருவுக்கு பிரதமர் பதவியிலிருந்து ஒருவரை நீக்கும் அளவுக்கு வலிமையுள்ளதா என்றுதானே கேட்கிறீர்கள்? ஆம் என்பதுதான், அதற்கு விடையாகும். நவாஸ் ஷெரீஃப் விஷயத்தில் இதுதான் நடந்திருக்கிறது.

தொடரும் சாபம்

பாகிஸ்தானில் பிரதமரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகும். சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்றுவரை, இதுவரை ஒருவர் கூட ஐந்து ஆண்டுகள் முழுமையாகப் பதவியில் நீடித்ததில்லை. பனாமா பேப்பர்ஸ் ஊழல் விவகாரத்தில், சொத்துக்குவிப்பு செய்தது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், நவாஸ் ஷெரீப்பை பிரதமர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்தும், அவர் மீது வழக்குப்பதிவு விசாரணை செய்யவும் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. கடந்த 2013ஆம் ஆண்டு மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவியேற்ற நவாஸ் ஷெரிஃப், 04 ஆண்டுகள் 54 நாள்கள் பிரதமர் பதவியில் இருந்திருக்கிறார்.

பனாமா பேப்பர்ஸ்

மத்திய அமெரிக்க நாடான பனாமாவைச் சேர்ந்த மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்தின் உதவியுடன், உலகின் பல பிரபலங்களும், நிறுவனங்களும் வெளிநாடுகளில் முறைகேடாக சொத்துக்குவித்திருப்பதாகக் கடந்த ஆண்டு தகவல்கள் வெளியாகின. இதில், 3,60,000 தனி நபர் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

மொசாக் பொன்சேகா நிறுவனத்தின் டேட்டாபேஸில் இருந்து, சுமார் 1.15 கோடி பக்க ஆவணங்கள் வெளியே கசிந்தன. இதை சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டது. இதன் பின்னர், இந்தச் செய்தி உலகையே உலுக்கியது

உலகின் மிகப்பெரிய டேட்டா லீக் 

இந்திய நடிகர் அமிதாப்பச்சன், அவருடைய மகன் அபிஷேக்பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்கள் இதில் அடிபட்டன. நவாஸ் ஷெரீப், 1990களில் பிரதமராக இருந்தபோது, சட்டவிரோதமாக லண்டனில் சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக பனாமா பேர்பர்ஸ் வெளியானதை அடுத்து, குற்றச்சாட்டு  எழுந்தது. இந்தச் சொத்துகளை அவருடைய மகன்கள் மற்றும் மகள் ஆகியோர் நிர்வகிப்பதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, பிரதமர் பதவியிலிருந்து ஷெரீஃப்பை பதவிநீக்கம் செய்து, அவருக்கெதிரான ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்கவேண்டும் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் இம்ரான்கான் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அதன்பின் வாஜித் ஜியா தலைமையிலான கூட்டு விசாரணைக்குழுவை, இந்த விவகாரம் குறித்து விசாரிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

குட்டு வெளிப்பட்டது

கூட்டு விசாரணைக் குழுவின் விசாரணையில், ஷெரீப் குடும்பத்தினரின் வருவாய் மற்றும் சொத்து குறித்த ஆவணங்களில் நிறைய குளறுபடிகள் இருந்தது கண்டறியப்பட்டது. இந்நிலையில், லண்டன் சொத்துக்கும் தங்கள் குடும்பத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை நிரூபிக்கும்வகையில், நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், இக்குழுவிடம் சில ஆவணங்களை சமர்ப்பித்தார்.

இந்த ஆவணங்கள்தான் இந்த வழக்கின் முக்கிய சாட்சியமாக மாறியது. 2006ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேதியிட்ட இந்த ஆவணங்கள் அனைத்தும் ‘கலிப்ரி’ (Calibri) என்ற ஆங்கில எழுத்துருவில் தயாரிக்கப்பட்டிருந்தன. விண்டோஸ் 2007 ஒபரேட்டிங் சிஸ்டத்தின் டீஃபால்ட் (Default)  எழுத்துரு (Font) ஆக, இதுதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த எழுத்துரு மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் 2007ஆம் ஆண்டில் இருந்துதான் வர்த்தக ரீதியாக வெளியிடப்பட்டது.

லூகாஸ் டி க்ரூட் (Lucas De Groot) என்பவர்தான் இந்த எழுத்துருவை வடிவமைத்தவர். இந்த எழுத்துருவை வடிவமைக்கும் பணி 2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2004ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதன்பின், 2006ஆம் ஆண்டு மே மாதம்தான் முதல்முதலாக டெவலப்பர்களுக்கான பீட்டா வடிவமாக இது வெளியிடப்பட்டது. ஆனால், மரியம் நவாஸ் சமர்ப்பித்த ஆவணங்கள் பிப்ரவரி மாதம், 2006ஆம் ஆண்டு தேதியிடப்பட்டிருந்தன. எனவே, இந்த ஆவணங்கள் போலியானவை என்ற முடிவுக்கு விசாரணைக்குழு வந்தது.

ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து, நவாஸ் ஷெரிப்பை பிரதமர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்தும், அவர் அரசியல் தொடர்பான செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்தது. மேலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதையடுத்து நவாஸ் ஷெரீஃப் பதவி விலகினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்