யுத்தத்தால் நலிவுற்றோருக்கான, தொழில் திட்டங்களை விரிவுபடுத்தியுள்ளோம்: அமைச்சர் றிசாட்
யுத்தத்தால் பாதிப்படைந்து நலிவுற்று வாழும் வடக்கு – கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப, கைத்தொழில் வர்த்தக அமைச்சு மேற்கொண்டு வரும் தொழிற்றுறைத் திட்டங்களை மேலும் விரிவுபடுத்தியுள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய அருங்கலைகள் பேரவையினால், மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் உள்ள நறுவிலிக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள பனம் பொருட்கள் உற்பத்திக் கிராமத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும்போதே, மேற்கண்டவாறு அமைச்சர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்;
“சுற்றுலாத் துறையை மேம்படுத்த அரசாங்கம் அரிய பல திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. இந்த திட்டத்தில் மன்னார் மாவட்டமும் உள்ளீர்க்கப்பட்டுள்ளது. இந்த பிரதேசத்தில் சுற்றுலாத் துறையை வளர்ச்சி பெறச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த மக்கள் இந்த துறையின் பலாபலன்களை அனுபவிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
மன்னார் மாவட்டத்தில் பனம்பொருள் உற்பத்தி பொருட்களைக் கொண்டு கைவினைப் பொருட்களை உருவாக்குவதற்காக, நறுவிலிக்குளத்தில் புதிய முயற்சியை ஆரம்பித்துள்ளோம். நறுவிலிக்குள மக்களுக்கு இன்றைய நாள் சுபீட்சமாக அமைந்த போதும், ஒட்டுமொத்த மன்னார் மாவட்ட மக்களும் இதன் மூலம் பயனடைந்து தமது வாழ்க்கையை வளப்படுத்த முடியும்.
மன்னார் மாவட்டம் பனைவளம் நிறைந்த பூமி. எனினும் திட்டமிட்ட அடிப்படையில் இந்த துறையை கடந்த காலத்தில் அபிவிருத்தி செய்ய முடியவில்லை. எனவேதான் இந்த துறையை வளர்த்தெடுத்து மக்களுக்கு லாபம் ஈட்டக்கூடிய துறையாக மாற்றியமைக்க வழி செய்துள்ளோம்.
இது தொடர்பான பயிற்சிகளைப் பெற்றவர்களுக்கு மூலப்பொருட்களையும் சாயம் போன்ற இன்னோரன்ன பொருட்களையும் வழங்கியிருப்பதோடு, தையல் இயந்திரங்களையும் வழங்குகின்றோம். பயிற்சிகளைப் பெற்றவர்களுக்கு பகரமாக நாம் இந்த சாதனங்களை வழங்கிய போதும், அவர்கள் இதனைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் தமது பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும்.
கூட்டுறவின் அடிப்படையில் இந்த தொழிலை திட்டமிட்டு மேற்கொண்டால் அபரிமிதமான லாபம் ஈட்ட முடியும். இவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்போம். அதன் மூலம் இந்த முயற்சியை இடையறாது மேற்கொள்ள முடியும். நறுவிலிக்குள கிராமத்தை நாங்கள் பனை அபிவிருத்தி உற்பத்தி கிராமமாக பிரகடனம் செய்துள்ளமையை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன்.
கைத்தொழில் வர்த்தக அமைச்சில் இவ்வாறான பயிற்சிகளைப் பெறுவதற்கு சுமார் 25,000 பேர் பதிவு செய்துள்ளனர்” என்றார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்னற உறுப்பினர் எம்.எம். காதர் மஸ்தான், வடமாகாண அமைச்சர் டெனீஷ்வரன், தேசிய அருங்கலைகள் பேரவை அதிகாரி ஹிஷானி போகல்லாகம, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் இர்ஷாத் ரஹ்மதுல்லா, கிரபைக் நிறுவன பணிப்பாளர் அலிகான் ஷரீப் மற்றும் மன்னார் மாவட்ட மேலதிக அரச அதிபர் ஸ்டான்லி டி மெல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
(அமைச்சரின் ஊடகப் பிரிவு)