கிழக்கு மாகாண சபைத் தேர்தல், இந்த வருடம் இல்லை; அரசாங்கம் தீர்மானம்

🕔 July 26, 2017

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளின் தேர்தல்களையும் ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக் காலங்கள் எதிர்வரும் ஒக்டோபர் 01ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றன. இந்த நிலையில், ஒக்டோபர் 02ஆம் திகதியன்று, மூன்று சபைகளுக்குமான தேர்தல்களுக்கு வேட்புமனுக்களை கோரவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்திருந்தார். இருந்தபோதும், தேர்தல்களை ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாட்டிலுள்ள ஒன்பது மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல்களை நடத்துவதற்கான தீர்மானமொன்று, நேற்று செவ்வாய்கிழமை அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாகவே, கிழக்கு உள்ளிட்ட மூன்று சபைகளுக்குமான தேர்தல்களை இந்த வருடம் நடத்துவதற்கு முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய தேர்தல் முறைமையின் கீழ், நாட்டிலுள்ள அனைத்து மாகாணசபைகளின் தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவதற்கான பிரேரணையொன்றினை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்தார். இதனை ஏற்றுக் கொள்வதாக அமைச்சரவை தீர்மானித்தது.

தோற்று விடுவோம் எனும் பயத்தினாலேயே, தேர்தல்களை அரசாங்கம் ஒத்தி வைப்பதாக ஒன்றிணைந்த எதிரணி குற்றம்சாட்டி வரும் நிலையிலேயே, தற்போது கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளின் தேர்தல்களையும் ஒத்தி வைக்கும் நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்