பொத்துவில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்; ஜௌபரின் முயற்சியினால் அரபு நாட்டவர் அன்பளிப்பு
– முஸ்ஸப் –
பொத்துவில் பிரதேசத்திலுள்ள கஷ்டப் பகுதி பாடசாலை மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்கள் மற்றும் குடை ஆகியவற்றினை அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வுகள் அண்மையில் இடம்பெற்றன.
ஐக்கிய அரபு ராஜியத்தைச் சேர்ந்த விமானி அஹமட் அல்தாயி என்பவரின் சொந்த நிதியிலிருந்து, மேற்படி பொருட்கள் கொள்ளவனவு செய்யப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கை சுற்றுலா கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம். ஜௌபர், மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, மாணவர்களுக்கு மேற்படி உதவி கிட்டியமை குறிப்பிடத்தக்கது.
சர்வோதயபுரம் ஆத்திமுனை பாடசாலை, பொத்துவில் சௌத் ஆபிரிக்கா வீட்டுத் திட்டப் பாடசாலை, செங்காமம் பாடசாலை மற்றும் ஹிஜ்ரா நகர் பாடசாலை ஆகியவற்றில் கற்கும் மாணவர்களுக்கு மேற்படி உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
ஐக்கிய அரபு ராஜியத்தைச் சேர்ந்த விமானி அஹமட் அல்தாயி நேரடியாக, மேற்படி பாடசாலைகளுக்கு விஜயம் செய்து, உதவிப் பொருட்களை மாணவர்களுக்கு வழங்கினார்.
இந் நிகழ்வுகளில் இலங்கை சுற்றுலா கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம். ஜௌபர், பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி யூ.பி. வசந்த குமார மற்றும் பொத்துவில் உலமா சபைத் தலைவர் மௌலவி எச்.எம். ஆதம்பாவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பொத்துவில் பிரதேசத்தில் இவ்வாறான பல்வேறு சமூநல செயற்பாடுகளை, இலங்கை சுற்றுலா கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம். ஜௌபர், மிக நீண்ட காலமாகச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.