கிழக்கு முதலைமைச்சர், பூனைக்குட்டியாக மாறி, தெரு விளக்குகளைப் பொருத்திக் கொண்டிருக்கிறார்: சுபையிர்

🕔 July 20, 2017

– எம்.ஜே.எம். சஜீத் –

சிங்கம் போல் வந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர், பூனைக்குட்டியாக மாறி – தெரு விளக்குகளைப் பொருத்திக் கொண்டிருக்கிறார் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர்தெரிவித்தார்.

முதலமைச்சருக்கு கிழக்கு மக்களின் காணிப்பிரச்சினைகளை தீர்க்க நேரமில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

கிழக்கு மாகாண சபையின் 80ஆவது அமர்வு தவிசாளர் சந்திரதாச கலபெதி தலைமையில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதன்போது, கடந்த யுத்த காலத்தில் அச்சத்தின் காரணமாக இடம்பெயர்ந்து காணிகளை இழந்தவர்களின் காணி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பது தொடர்பில், தனிநபர் பிரேரணை ஒன்றினை சமர்ப்பித்து உரையாற்றும் போதே மேற்கண்ட விடயங்களை சுபையிர் கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

“கடந்த காலங்களில் எமது நாட்டிலே ஏற்பட்ட கொடூர யுத்தத்தினால், கிழக்கு மாகாணம் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. அக்காலப்பகுதியிலே எல்லைக் கிராமங்களில் வாழ்ந்த மக்கள் தங்களுடைய உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இடம்பெயர்ந்தார்கள்.


குறிப்பாக 1990ஆம் ஆண்டு அசாதாரண சூழ்நிலையில் சில ஆயுதக்குழுக்களினால் எல்லைக் கிராமங்களில் வாழ்ந்த மக்கள் தாக்கப்பட்டனர். இவ்வாறான கொடூர சம்பவங்களினால், அந்த மக்கள் தங்களின் உயிர், உடைமைகளை இழந்து பல கஷ்டங்களை எதிர்நோக்கினர்.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்பற்று பிரதேச செயகப் பிரிவில் காடுகளை வெட்டி, அரச அனுமதியோடு வருடாந்த காணி அனுமதிப்பத்திரங்களை பெற்று விவசாயம் மேற்கொண்டுவந்த ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்தவர்களும், கடந்த யுத்தத்தின் போது, தங்களின் சொத்துக்கள், கால்நடைகள் வேளான்மைகள் மற்றும் காணி அனுமதிப்பத்திரங்களை கைவிட்டுவிட்டு இடம்பெயர்ந்தனர்.

குறிப்பாக ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மரப்பாலம் மற்றும் பீகலாப்ப போன்ற பிரதேசங்களிலும் சேனைமடு, கட்டுக்கிளியா, கொக்கு குந்திமடு போன்ற பகுதிகளிலும் ஏறாவூரைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்டோர் விவசாயம் செய்து வந்தனர்.

யுத்தகாலத்தின் போது அச்சம் காரணமாக இடம்பெயர்ந்த அந்த மக்கள், தங்களுடைய விவசாயக் காணிகளில் விவசாயம் செய்ய முடியாமலும், தங்களின் வருடாந்த காணி அனுமதிப்பத்திரத்தினை புதுப்பிக்காமலும் இருந்தனர். காரணம் அப்பிரதேசங்கள் புலிகளின் கட்டுப்பாட்டில்  இருந்தன.

எமது நாட்டிலே சமாதானம் ஏற்ப்பட்டதன் பின்னர், யுத்தத்தின் காரணமாக வருடாந்த அனுமதிப்பத்திரம் புதுப்பிக்காதவர்கள் அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்குமாறு அரசாங்கம் அறிவிப்புச் செய்தது. இதனை இனவாதம் கொண்ட அதிகாரிகள் உரிய மக்களுக்கு அறிவிக்கவில்லை. இன்று சில உயர் அதிகாரிகள் இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்துவதற்கு முனைகின்றனர். இதுமிகவும் கவலையான விடயமாகும். இதனை முதலில் அடையாளம் காணுங்கள்.

இன முறுகலை ஏற்படுத்துவதன் மூலம், இந்த நாட்டை அழிவுப்பாதைக்கே கொண்டு செல்ல முடியும். ஒருவருக்கு அல்லது ஓர் இனத்துக்கு அநியாயம் செய்துவிட்டு, யாரும் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது. இதனால் எதனையும் சாதித்தும் விட முடியாது. நீங்கள் எறிகின்ற பந்து – உங்களை நோக்கி மீண்டும் வரும். இப்போது பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் சிலர் இன ரீதியாக செயற்படுகின்றனர்.

தற்போது யுத்தம் முடிவடைந்து சமாதானம் மலர்ந்துள்ள நிலையில், ஏறாவூரைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்திற்கு சென்று காணி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கு படுகின்ற அவலநிலைமையினை பார்க்கின்ற போது, மிகவும் மனவேதனையாகவுள்ளது.

இந்தவிடயமாக பல தடவை – கிழக்கு மாகாண காணி அமைச்சரிடம் நான் முறையிட்டும் அவர் அதனை கவத்திற்கொள்ளவில்லை. பொறுப்புவாய்ந்த காணி அமைச்சர் ஒரு பெண்ணாக இருந்தும், அவருக்கு தாய்ப்பாசம் தெரியாது. ஏழை விவசாயிகள் மீதான பாசம், அவர்கள் படும் அவலங்கள் குறித்து தெரியாது.

எனவே, யுத்த காலத்தின் போது அச்சத்தின் காரணமாக இடம்பெயர்ந்து, காணிகளை இழந்து, காணிகளின் வருடாந்த அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்க முடியாது அல்லல்படும் விவசாயிகள் தற்போதைய சமாதான சூழ்நிலையில் அக்காணிகளின் வருடாந்த அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்து விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, கிழக்கு மாகாண சபை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்