வடக்கு – கிழக்கு மாகாணங்களை நிபந்தனையின்றி இணைப்பதனை, மு.காங்கிரஸ் அங்கீகரிக்காது; ஊடகவியலாளர்களிடம் ஹரீஸ் தெரிவிப்பு

🕔 July 21, 2015

Harees - Press - 0325
– முன்ஸிப் –

டக்கு – கிழக்கு மாகாணங்களை நிபந்தனையற்ற வகையில் இணைப்பதை மு.காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாது என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐ.தே.கட்சியின் மு.காங்கிரஸ் சார்பான, அம்பாறை மாவட்ட அபேட்சகருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

ஆயினும், இனப் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, 13ஆவது திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதிலும், 13க்கு அப்பால் சென்று அதிகாரங்களை வழங்குமாறு, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து, மு.காங்கிரஸ் பாடுபடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குமாறு, எதிர்வரும் அரசாங்கத்தில் மு.காங்கிரஸ் வலியுறுத்தும் என்றும் அவர் கூறினார்.

இருந்தபோதும், நிபந்தனையற்ற வகையில், வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பதனை, மு.காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று, ஹரீஸ் குறிப்பிட்டார்.

ஐ.தே.கட்சியில் மு.காங்கிரஸ் சார்பாக, அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் மூன்று முஸ்லிம் வேட்பாளர்களும் இணைந்து, நேற்று திங்கட்கிழமை, சாய்ந்தமருது ‘ஸீ பிறீஸ்’ ஹோட்டலில், ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடத்தினர். அதில் கலந்து கொண்டு பேசிய போதே, வேட்பாளர் ஹரீஸ் மேற்கண்டவாறு கூறினார்.

இதேவேளை, கல்முனை கரையோர மாவட்டத்தினை எதிர்வரும் அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுத் தருமெனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உறுதியளித்தார்.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்குப் பிறகு, ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்குமென்றும், அதன்போது – நிச்சயமாக, கல்முனை கரையோரை மாவட்டத்தினை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுத் தருமென்றும் ஹரீஸ் உறுதிபடத் தெரிவித்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அங்கு மேலும் தெரிவிக்கையில்; சாய்ந்தமருதுப் பிரதேசத்துக்கென உள்ளுராட்சி சபையொன்றினைப் பெற்றுக் கொடுப்பதில், மு.காங்கிரஸ் தெளிவானதொரு முடிவோடு உள்ளதாகவும் கூறினார்.

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபைக் கோரிக்கையினை, சாய்ந்தமருது பிரதேச பள்ளிவாசல் முன்வைத்தபோது, அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எனும் வகையில், குறித்த பள்ளிவாசல் நிருவாகத்தோடு தான் பேசியதாகவும் – இதன்போது, சாய்ந்தமருது பிரதேசத்துக்கான உள்ளுராட்சி சபைக் கோரிக்கைக்கு தனது ஆதரவினைத் தெரிவித்ததோடு, அவ்வாறானதொரு சபையினைப் பெறுவதற்கு தன்னுடைய பங்களிப்பினை வழங்குவதாக, பள்ளிவாசல் நிருவாகத்தினரிடம், தான் உறுதியளித்ததாகவும் – அவர் விபரித்தார்.

இதேவேளை, மு.காங்கிரஸ் தலைவரையும் – சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகத்தினைரையும் சந்திக்க வைத்ததோடு, சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக் கோரிக்கைக்கு மு.கா. தலைவரின் ஆதரவினை, தான் பெற்றுக் கொடுத்ததாகவும் ஹரீஸ் விளக்கமளித்தார்.

அத்தோடு, உள்ளுராட்சி அமைச்சர் கரு ஜெயசூரியவை மு.காங்கிரஸ் உயர் மட்டக் குழுவினர் சந்தித்து, சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையினை உருவாக்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், துரதிஷ்டவசமாக இடைநடுவில் நாடாளுமன்றம் கலைந்து விட்டதாகவும் அவர் கூறினார்.

மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐ.தே.கட்சியின் மு.கா. சார்பான வேட்பாளருமான பைசால் காசிம், மற்றுமொரு வேட்பாளரும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருமான எம்.ஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் மற்றும் கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டு தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்