மதஸ்தலங்களின் வருமானத்தில் 14 வீதத்தை, வரியாக அறவிட அரசாங்கம் திட்டம்
அரசாங்கம் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள உத்தேச வரித் திருத்தச் சட்டத்தில், சகல மதஸ்தலங்களுக்கும் கிடைக்கின்ற வருவாயில் 14 வீதத்தினை, வரியாக அறவிட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தபோதே, அவர் இதனைத் தெரிவுபடுத்தியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில், கடந்த 2006ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வரிச் சட்டத் திருத்தத்தில், மதஸ்தலங்களுக்கு எதுவித வரிகளும் அறவிடப்படாது என அறிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த அரசாங்கம் விரைவில் கொண்டு வர உத்தேசித்துள்ள வரிச் சட்ட மூலத்தில், சகல மத ஸ்தாபனங்களுக்கும் கிடைக்கின்ற வருவாயில் 14 வீதத்தினை, வரியாக அறவிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக, மகாநாயக்க தேரர்களிடம் பந்துல சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வேண்டுகோளுக்கிணங்க, முன்னாள் நிதியமைச்சரினால், இந்த யோசனை உள்ளடக்கப்பட்டதாகவும் பந்துல தெரிவித்துள்ளார்.