உதுமாலெப்பையின் முறைப்பாட்டுக்கு பலன்; ஒருங்கிணைப்பு கூட்டம் தொடர்பில் அரசாங்க அதிபர் அறிவுறுத்தல்

🕔 July 17, 2017
– எம்.ஜே.எம். சஜீத் –

ம்பாறை மாவட்ட பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவர்களுடைய ஆலோசனையைப் பெற்ற பிறகு, ஒருங்கிணைப்புக் கூட்டங்களுக்கான திகதியை தீர்மானிக்குமாறு, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பீ வணிகசிங்க, பிரதேச செயலாளர்களுக்கு இன்று திங்கட்கிழமை அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களை ஜனாதிபதி நியமித்துள்ளார்.

இந்நிலையில் அட்டாளைச்சேனை, நிந்தவூர், அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேசங்களுக்கு இணைத்தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ள சுகாதார பிரதி அமைச்சர்  பைசால் காசிம் குறித்தொதுக்கிய தினங்களில், அப்பிரதேசங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் இம்மாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த திகதிகளில் மற்றொரு இணைத் தலைவரான கிழக்கு மாகாண சபை எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பையினால் குறித்த கூட்டங்களில் கலந்து கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது. குறித்த திகதிகளில் கிழக்கு மாகாணசபை அமர்வு உள்ளிட்ட நிகழ்வுகள் இருப்பதாலேயே தன்னால் கலந்து கொள்ள முடியாது என்று உதுமாலெப்பை சுட்டிக்காட்டினார். அதேவேளை, தன்னிடம் ஆலோசிக்காமல் கூட்டத்துக்கான திகதிகளை நிர்ணயித்தமை தவறாகும் என்றும் உதுமாலெப்பை குறிப்பிட்டார்.

எனவே, இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெனாண்டோவுக்கு, முறைப்பாட்டுக் கடிதமொன்றினை உதுமாலெப்பை அனுப்பியிருந்தார்.

மேற்படி விடயம் தொடர்பாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கும் முறைப்பாட்டுக் கடிதத்தின் பிரதி அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட அரசாங்க அதிபர், உரிய பிரதேச செயலாளர்களுக்கு மேற்படி  அறிவிப்பினை கடிதம் மூலம் வழங்கியுள்ளார்.

இதேவேளை மேற்குறித்த பிரதேச செயலகப் பிரிவுகளில் 17, 18 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த கூட்டங்களை பிறிதொரு தினத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்