வீதி தொடர்பான விபரம் கோரி, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஊடகவியலாளர் விண்ணப்பம்

🕔 July 15, 2017

– அஹமட் –

ட்டாளைச்சேனையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள வீதியொன்று தொடர்பில் விபரங்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளருக்கு ஊடகவியலாளர் ஒருவர் விண்ணப்பம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

இம்மாதம் 05ஆம் திகதி பதிவுத் தபால் மூலம், இந்த விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் நிதியில், 1000 கிலோமீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ், அட்டாளைச்சேனைக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்தும், அந்த நிதியினைக் கொண்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ள வீதி தொடர்பிலும் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, மேற்படி விண்ணப்பத்தினை, சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர் அனுப்பி வைத்துள்ளார்.

1000 கிலோமீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு 60 லட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டதாக, ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில், அந்த நிதியினைக் கொண்டு, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீரின் அட்டாளைச்சேனையிலுள்ள வீட்டுக்கு, காபட் வீதியமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அபிவிருத்தி செய்ய வேண்டிய, மிக முக்கியமான பல வீதிகள் உள்ள நிலையில், குடியிருப்புகள் எவையுமற்ற, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீருடைய வீடு மட்டுமே அமைந்துள்ள வீதியினை காபட் வீதியாக அமைப்பது பாரிய அநீதி எனவும் ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.

இந்த நிலையிலேயே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், குறித்த நிதி மற்றும் அதனைக் கொண்டு அமைக்கவுள்ள வீதி பற்றிய விபரங்களைக் கோரி, அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளருக்கு, ஊடகவியலாளர் ஒருவர் விண்ணபித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விண்ணப்பத்துக்குக்கான பதிலை, 14 நாட்களுக்குள் உரிய உத்தியோகத்தர் அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறில்லாவிட்டால், விண்ணப்பதாரிக்கு மேன்முறையீடு செய்யவும், அதற்கும் உரிய பதில் கிடைக்காதவிடத்து, தகலறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு விண்ணப்பிக்கவும் முடியும்.

தகவலை வழங்காமல் அல்லது பிழையான தகவலை வழங்கும் அதிகாரியொருவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், தண்டனைக்கு ஆளாக முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: அமைச்சர் நசீரின் வீட்டுக்கு, 60 லட்சத்தில் வீதி; விளையாட்டு மைதானக் காணியும் அபகரிக்கப்படுகிறது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்