‘முழக்கத்து’க்கு எதிரான கூக்குரலால் பயந்து போன ஹக்கீம்; இரண்டரை நிமிடத்தில் பேச்சை முடித்துப் பறந்தார்

🕔 July 11, 2017

– அஹமட் –

கொழும்பிலிருந்து சாய்ந்தமருதில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த மு.கா. தலைவர் ஹக்கீம்; அங்கு 02 நிமிடங்களும் 28 விநாடிகளும் மட்டுமே உரையாற்றி விட்டு, கிளம்பிச் சென்ற சம்பவமொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

‘லீடர் அஷ்ரஃப் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம்’ எனும் பெயரில், சாய்ந்தமருதில் மின்னொளி கிறிக்கட் சுற்றுப் போட்டியொன்று நடைபெற்றது. இதன் இறுதி நாள் நிகழ்வில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் கலந்து கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. உள்ளுர் பிரதியமைச்சர் இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்கியிருந்தார்.

இந்தநிலையில், குறித்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது என்று, பிரதியமைச்சரிடம் மு.கா. தலைவர் கூறிவிட்டார். சில மாதங்களுக்கு முன்னர், சாய்ந்தமருது கடற்கரையில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் ரஊப் ஹக்கீம் கலந்து கொண்டு பேசியபோது, அவருக்கு எதிராக பெருமளவில்  கூக்குரல் தொடர்சியாக எழுந்தது. இதனையடுத்து, தனது பேச்சை உடனடியாக முடித்துக் கொண்டு, அங்கிருந்து ஹக்கீம் அகன்று சென்றிருந்தார். இதனை நினைவில் வைத்துக் கொண்டுதான், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது என்று, பிரதியமைச்சரிடம் மு.கா. தலைவர் கூறியிருந்தார்.

ஆனாலும், பிரதியமைச்சர் விடவில்லை. “சாய்ந்தமருதில் உங்களுக்கு எதிராக எதுவும் நடக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் வாருங்கள்” என்று, ஹக்கீமுக்கு, பிரதியமைச்சர் தைரியமூட்டி, வாக்குக் கொடுத்தார். அதனை நம்பித்தான் சாய்ந்தமருதுக்கு ஹக்கீம் வந்திருந்தார்.

ஹக்கீம் வருவதற்கு முன்னதாக, பிரதியமைச்சர் களத்தில் இறங்கினார். மு.கா.வுக்கு எதிரான, அதுவும் அகில இலங்கை மக்கள் காங்கிரசிலுள்ள முக்கிய நபர்களிடம் ‘ஆள் போட்டு’ பிரதியமைச்சர் பேசினார். “தயவு செய்து ஹக்கீம் வரும்போது, எதுவித எதிர்ப்பும் காட்ட வேண்டாம். அந்தாளுடன் எனக்கும் உடன்பாடு கிடையாது. ஆனால், அந்தாளை வைத்து, சில வேலைகளை செய்தாக வேண்டியிருக்கிறது. எனவே, முன்னர் கூக்குரலிட்டு கூட்டத்தைக் குழப்பியமை போன்று, இம்முறை செய்ய வேண்டாம்” என, தனது ஆட்களின் மூலம், பிரதியமைச்சர் கேட்டுக் கொண்டார். எதிராளிகளும் நாகரீகம் கருதி ‘டீலுக்கு’ ஒத்துக் கொண்டனர்.

இதன் பிறகுதான் கடந்த ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருதுக்கு ஹக்கீம் வந்தார். ஆனாலும், அவருக்கு பழைய கூக்குரல் நினைவுக்கு வந்திருக்க வேண்டும். அந்த குழப்பத்திலோ என்னவோ, தேசிய கொடியை தலைகீழாக ஏற்றி விட்டார். இது குறித்த செய்தியினை ‘புதிது’ வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு, அந்த நிகழ்வில் – ஹக்கீம் உரையாற்றுவதற்கு முன்னராக சில அரசியல்வாதிகள் உரையாற்றினர். அதில் மு.காங்கிரசின் புதிய தவிசாளர் முழக்கம் மஜீத்தும் பேசினார். அதன்போது மஜீதுக்கு எதிராக கூக்குரல்கள் எழுந்தன. இத்தனைக்கும் முழக்கம் மஜீதின் சொந்த ஊர் – சாந்தமருது. அப்படியிருந்தும், அவருக்கு எதிராக ‘கூ’ எழுந்தது. இது – ஹக்கீமுக்கு அச்சத்தை ஏற்படுத்தி விட்டது.

இதனால், இறுதியாக உரையாற்ற எழுந்த மு.கா. தலைவர் ஹக்கீம், மேடையில் இருந்த யாரையும் விழிக்காமல் நேரடியாக பேச்சுக்கு வந்தார். அது ஒரு குறும் பேச்சு. 02 நிமிடங்களும் 28 விநாடிகளும் மட்டுமே ஹக்கீம் பேசினார். முழக்கம் மஜீதுக்கு எதிராக எழுந்த கூக்குரல், தனக்கும் எழுந்து விடுமோ என்று, ஹக்கீம் அச்சப்பட்டமையே அதற்குக் காரணமாகும். ஒரு சினிமாப் பாடலை விடவும் குறைவானதொரு நேரத்துக்குள் தனது பேச்சினை முடித்துக் கொண்ட ஹக்கீம், மேடையை விட்டும் உடனடியாக அகன்று சென்றார்.

ஒரு காலத்தில் மு.காங்கிரசின் கோட்டை என்று, சாய்ந்தமருதினைச் சொல்வார்கள். ஆனால், இப்போது அந்த ஊரில் ஒரு கூட்டம் நடத்தி, அதில் பேச முடியாத நிலைவரம், மு.கா. தலைவருக்கு எழுந்துள்ளமை கலைக்குரிய விடயமாகும் என்று, இது குறித்து அறிந்தவர்கள் பேசிக் கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்