கதிர்காமம் யாத்திரிகர்களுக்கு, தாக சாந்தி; ஊடகவியலாளர் பேரவை வழங்கியது

🕔 July 11, 2017

– கலீபா, யூ.கே.கால்டீன், யூ.எல். றியாஸ் –

திர்காமம் திருத்தல யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில், உணவுப் பொருட்களும், தாக சாந்தியும் வழங்கும் நிகழ்வு, இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றது.

வட மாகாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணிக்கும் பக்தர்களுக்கு, பொத்துவில் பிரதேசத்தில் வைத்து அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை உறுப்பினர்கள் இந்த சேவையினை வழங்கினர்.

யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து கடந்த மாதம் 03ஆம் திகதி, தமது பாத யாத்திரையினை ஆரம்பித்த இவர்கள், நேற்று பொத்துவிலை வந்தடைந்து, அங்குள்ள முருகன் கோயிலில் தங்கினர்.

இதனையடுத்து, இன்றைய தினம் அவர்கள் தமது யாத்திரையினைத் தொடர்ந்த போது, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையினர், அவர்களுக்கு உணவுப் பொருட்கள், குடிநீர் மற்றும் குளிர்பானம் ஆகியவற்றினை வழங்கினார்கள்.

வேல்சாமி என்பவரின் தலைமையில் வடக்கிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணிக்கும் இந்தக் குழுவில் 125 பக்தர்கள் உள்ளனர். இவர்களில் அவுஸ்ரேலியா மற்றும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குகின்றனர்.

கதிர்காமம் செல்லும் பாத யாத்திரிகர்களுக்கு, ஒவ்வொரு வருடமும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை உறுப்பினர்கள், இவ்வாறான உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்